பாஜகவிற்கு ஒரு ஓட்டு போட்டால் 2 ஓட்டாக விழுகிறதா?

நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. இந்தநிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சோதனையானது நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் கேரளாவில் நேற்று நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவின் போது, பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள் பதிவானதாக கூறப்படுகிறது. மேலும் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 வாக்குகள் பதிவாகும்படி மென்பொருள் இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதே போல 9 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுக்காக ஒரு முறை பட்டனை அழுத்தும் போது பா.ஜ.க. தவிர மற்றவர்களுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு மட்டுமே வருகிறது எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக பா.ஜ.க.வுக்கு இரண்டு வாக்குகள் பதிவாவது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார் அளித்துள்ளனர். இதனிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை 100% ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க உத்தரவிடக்கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாக்களிக்கும்போது ஒப்புகை சீட்டு எந்திரத்தில் 7 நொடிகள் ஒரு சிறிய விளக்கு எரியும், அதன் பின்னர் அணைந்து விடும். இதனால் வாக்களித்த நபருக்கு ஒப்புகை சீட்டு பெட்டியில் விழுந்ததா, அல்லது வேறு ஏதாவது சீட்டு விழுந்ததா என்பது தெரியாது.

எனவே குறைந்தபட்சம் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் சீட்டு விழுவதை பார்க்கும் வகையில் அந்த விளக்கு நிரந்தரமாக எரிவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கேரள மாநிலம் காசர்கோட்டில் நடைபெற்ற வாக்களிப்பு ஒத்திகையின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விட கூடுதலாக ஒரு வாக்கு பா.ஜ.க.வுக்கு பதிவாகியுள்ளது, இது பத்திரிகைகளில் செய்தியாகவும் வந்துள்ளதாகவும், எனவே அப்படியெனில் தேர்தலில் இதுபோன்று முறைகேடு நடைபெறும் என்பதையே இது உறுதிபடுத்துகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், ஒப்புகைச் சீட்டு எந்திரம் எப்படி எல்லாம் செயல்படுகிறது. அதில் முறைகேடுகளில் ஈடுபட முடியுமா? என்ன மாதிரியான தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது? எந்தெந்த அதிகாரிகள் எல்லாம் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் ? இது தொடர்பாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணைய தரப்பிற்கு நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் கேரளாவில் காசர்கோடு பகுதியில் மாதிரி வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு எந்திரம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு வாக்கு பாஜகவுக்கு கூடுதலாக விழுந்தது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தேர்தல் நடவடிக்கைகள் மிகவும் புனிதமானதாக இருக்க வேண்டும் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here