இளவரசர் (1955- இல் இருந்து மன்னர்) மகேந்திரா, இளவரசி இந்திரா ராஜ்யலக்ஷ்மி ஆகியோரின் புதல்வர். இந்தியாவில் டார்ஜீலிங், புனித ஜோசப் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் ஈட்டன் கல்லூரி (1959-64), டோக்கியோ பல்கலைக்கழகம் (1967), மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1967-68) ஆகியவற்றில் உயர்கல்வியையும் கற்றார். *பிரேந்திரா ராணா குடும்பத்தைச் சேர்ந்த ஐஷ்வர்யா என்பவரை பெப்ரவரி 27 1970 இல் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள்.
இளவரசர் தீபேந்திரா (ஜூன் 27, 1971 – ஜூன் 4, 2001) இளவரசி சுருதி (அக்டோபர் 15, 1976 – ஜூன் 1, 2001) இளவரசர் நிரஞ்சன் (நவம்பர் 6 1977–ஜூன் 1 2001)
தந்தை மகேந்திரா 1960- இல் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்து நாடாளுமன்றத்தையும் கலைத்திருந்தார். பிரேந்திராவும் தனது தந்தையின் அடிச்சுவட்டிலேயே நாட்டை அரசாண்டார். சோவியத் ஒன்றியம், சீனா ஆகியவற்றின் தலையீடுகளை முறியடித்து நேபாளத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்டார்.
பின்னர், பிரேந்திரா நாடாளுமன்ற மக்காளாட்சி முறைக்கு ஆதாராவாளரானார். 1990- இல் நாட்டில் கிளர்ந்த மக்கள் எழுச்சியை அடுத்து ஏப்ரல் 8- இல் அரசியல் கட்சிகளின் மீதான தடைகளை நீக்கினார். நவம்பர் 9- இல் அரசியல் அமைப்புக்கு திருத்தங்களை அறிவித்தார்.
அதன்படி, மன்னராட்சியின் கீழ் பலகட்சி அரசியலுக்கு இடமளித்தார். மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனாலும், பல கட்சிகளுக்கும் இடையில் எழுந்த கருத்து வேறுபாடுகள், மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நாட்டில் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தன. 1996 முதல் 2006 வரையில் மாவோயிஸ்டுகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் இப்போர் இடம்பெற்றது.
ஜூன் 1, 2001- இல் அரச விருந்து ஒன்றின் போது பிரேந்திராவும் அவரது முழுக்குடும்ப உறுப்பினர்களும் பிரேந்திராவின் மகன் இளவரசர் தீபேந்திராவினால் சுட்டுக் கொல்லப்பட்டபோது நேபாளத்தின் உறுதிநிலை கேள்விக்குள்ளானது. இளவரசர் தீபேந்திரா தன்னைத் தானே சுட்டுப் படுகாயமுற்றார்.