ஜெய்சங்கர் (இ. ஜூன் 3, 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார்.
ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும் காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர்.
இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் ‘Friday hero’ (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார். 2000-ஆம் ஆண்டு ஜூன் 3- ஆம் தேதி அன்று, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், தனது 62- ஆம் வயதில் ஜெய்சங்கர் மாரடைப்பால் காலமானார்.



















