போலி வேலை விளம்பரத்தால் வெ 12,000 இழந்த கல்லூரி மாணவர்

 

மலாக்கா , ஜூன் 10-

முக நூலில் விளம்பரப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்பு இணைய பக்கத்தில் லாபகரமான வருமானத்தை ஈட்ட விரும்பிய கல்லூரி மாணவர் ஒருவர் வெ. 12,000  ஐ இழந்தார்.

கடந்த மார்ச் 3ஆம் திகதி எ ஜோப் எனும் முக நூல் பக்கத்தில் வேலைக்கான விண்ணப்பத்தை பதிவு செய்தபோது 23 வயதுடைய அந்த இளைஞர இணைய மோசடியில் சிக்கியதாக மலாக்கா போலீஸ் தலைமையக வணிக குற்றவியல் புலனாய்வுத் துறை (ஜே.எஸ்.ஜே.கே) தலைவர் ஏ.சுந்தரராஜன் தெரிவித்தார்.

அந்த போலியான விளம்பர சலுகையால் ஈர்க்கப்பட்ட அந்த மாணவர், இணைய விண்ணப்பத்தின் வாயிலாக புலனத்தின் மூலம் அந்த அகப்பக்கத்தில் தரகராக இருந்த அதிகாரியை தொடர்பு  கொண்டார்.

அந்த மாணவருக்கு 60 வேலைகளுக்கு அந்த நிறுவனம் வெ 17,290 சம்பளப் பணமாக வழங்குவதாக தன்னிடம் தெரிவித்தாகவும் அந்த மாணவர் போலீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த அதிகாரி சம்பளப் பணத்தை கொடுப்பதற்கு முன்பு அந்த மாணவர் நிறுவனத்திற்கு முன் பணம் செலுத்த வேண்டும் எனவும் அப்பணம் மிண்டும் திருப்பி தரப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அந்த அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்த மாணவர் வெ 12,810 ஐ கடந்த மே 4ஆம் திகதி ஐந்து வங்கிப் பரிவர்த்தனைகளின் மூலம் செலுத்தினார்.

கணிசமான தொகையை அந்தப் போலி ஆசாமியின் வங்கி கணக்கிற்கு பட்டுவாட செய்த பின்னரும் அந்த நபர் கூடுதல் பணம் செலுத்தும்படி கேட்டதாகவும் தான் ஈட்டிய வருமானத்தை மீட்டெடுக்க பணம் இன்னும் போதுமானதாக இல்லை எனவும் அந்த நபர் கூறியுள்ளார்.

நேர்மாறாக பேசும் அந்த நபர்  ஏமாற்றுவதாக  உணர்ந்து கொண்ட மாணவர் தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட பிறகு சம்மந்தப்பட்ட நபரை மிண்டும் தொடர்புக் கொள்ள முடியாமல் போனது .

இதன் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை மெர்லிமாவ் காவல் நிலையத்தில்  அம்மாணவர்  புகார் அளித்தாக சுப்ரிடெண்டன் சுந்தர ராஜன் கூறினார்.

 

ரெ. மாலினி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here