இந்திய மாணவர்களுக்கு அரசு பல்கலைக்கழகங்களில் இடம்

சாதனை மாணவர்களுக்கு சோதனை வேண்டாம்!

2020 எஸ்பிஎம் முடிவுகள் 2021, ஜூன் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம், அடைவு நிலை கடந்த ஆண்டுகளைவிட சிறப்பாகப் பதிவாகி இருக்கிறது.

கோவிட்-19 கிருமி பெருந்தொற்று நாட்டின் பொருளாதாரத் துறைகள் மட்டுமன்றி கல்வித் துறையையும் முடக்கிப் போட்டுவிட்டது. 2020 மார்ச் தொடங்கி இன்றளவும் ஆரம்ப முதல் பல்கலைக்கழகம் வரை மூடப்பட்டிருக்கின்றன.

2020 நவம்பர் – டிங்ம்பர் மாதங்களில் நடைபெற வேண்டிய எஸ்பிஎம் தேர்வுகள் 2021 பிப்ரவரியில் நடத்தப்பட்டன. இதற்குத் தயார்ப்படுத்தும் வகையில் ஜனவரியில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு நேர்முக கற்றல் கற்பித்தலுக்குப் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது.

மிகவும் நெருக்கடிகள் – சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் மாணவர்கள் கடுமையான மன உளைச்சல்கள் ஊடே கல்வி கற்றனர். இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது மாணவர்களின் சாதனைகள் – அடைவு நிலைகள் பிரமிக்க வைத்தன.

இவர்களில் நம் பிள்ளைகளின் தேர்வு முடிவுகள் அசத்தலாகவும் அபாரமாகவும் உள்ளது. தமிழ்ப்பள்ளிகளில் ஆரம்பக் கல்வியைக் கற்ற மாணவர்களின் அடைவுநிலையும் பெற்ற புள்ளிகளும் புருவங்களை உயர வைத்தன.

தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் உட்பட அனைத்து 11 பாடங்களிலும் ஏ பெற்று சாதனை படைத்திருக்கின்றனர். மூன்று இனப் பிள்ளைகளும் பயிலும் சில இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் 11ஏ பெற்று பள்ளியில் முதல்நிலை மாணவர்களாகத் தடம் பதித்திருக்கின்றனர்.

பெற்றோரும் உற்றார் உறவினர்களும் சமுதாயமும் இவர்களை இதயங்களில் சுமந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதற்குக் காரணமாக இருந்த ஆசிரியர்களையும் கைகூப்பி வணங்குகின்றோம்.
இந்த மகிழ்ச்சி எல்லாம் இன்னும் எத்தனை காலத்திற்கு? இந்த மகிழ்ச்சி கண்ணீராக மாறக்கூடிய நாட்களும் வெகு தொலைவில் இல்லை.

இந்தச் சாதனை மாணவர்கள் அடுத்தக் கட்டமாக அவர்களின் கனவுகளைச் சுமந்துகொண்டு பல்கலைக்கழகத்தில் கால் பதிக்கப்போகும் பொன்னான நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கோப்பு படம்

நாட்டில் கிட்டத்தட்ட 20 அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவற்றின் கதவு இந்தச் சாதனைக்குரிய இந்திய மாணவர்களுக்கு இயல்பாகவே திறந்துவிடப்படுமா?

இல்லை… வழக்கம்போல் போராடி, முட்டி மோதிதான் இடங்களைப் பெற வேண்டுமா? தகுதி அன்றி கோட்டா முறையைக் காட்டி கதவுகள் அடைக்கப்படுமா?

அதுமட்டும் அல்லாது நம் பிள்ளைகள் விரும்பிய துறைகளில் வாய்ப்புகள் பெறுவார்களா என்ற கேள்வியும் ஆர்ப்பரிக்கத் தொடங்கி இருக்கிறது.

தேர்வு முடிவுகள் வந்த மறுநாளே தனியார் பல்கலைக்கழகங்கள் வாய்ப்புகளை அள்ளித் தந்து மாணவர்களின் கைத்தொலைபேசிகளுக்குத் தகவல் அனுப்பத் தொடங்கிவிட்டன.

கல்வியில் வளம்பெற்ற அளவுக்கு நம்பிள்ளைகள் பண பலம் படைத்தவர்களாக இருக்கவில்லையே! அரசாங்கப் பல்கலைக்கழகங்கள்தாம் நம் பிள்ளைகளுக்கு ஏற்புடைய சக்தியாக இருக்கின்றன.

வாய்ப்புத் தருகிறோம் என்று சொல்லி நம் பிள்ளைகள் விரும்பும் துறைகளை விட்டு விட்டு சம்பந்தமே இல்லாத துறைகளில் இடம் தந்து பேரம் பேசி அலைக்கழிக்கும் நிலை இம்முறை எழக்கூடாது.

மஇகா , கல்வி துறை சார்ந்த அரசு சார்பற்ற இயக்கங்கள் இப்போதே அந்த உரிமைகளைப் பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு களம் இறங்க வேண்டும்.

கடந்தகால அனுபவங்களைப் பாடமாக எடுத்துக்கொண்டு நம் பிள்ளைகளின் தேர்வு முடிவுகளைத் திரட்டி சரியான வழிகாட்டுதல் , ஆலோசனைகள் தந்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுத் தரும் பணியை நிறைவாகச் செய்து முடித்திட வேண்டும்.
நன்றே செய்… அதனை இன்றே செய்!

 

 

பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here