நம்பிக்கையே வாழ்க்கை- இல்லையேல் தாங்காது இந்த பூமி

தற்கொலைகளுக்கு முடிவுதான் என்ன?

கோவிட்-19 பெருந்தொற்று நாட்டைச் சூறையாடிய நாளில் இருந்து தினமும் ஒரு தற்கொலை நிகழ்ந்த வண்ணம் உள்ளது. கடந்தாண்டு மார்ச் 18ஆம் நாளில் இருந்து அக்டோபர் 30ஆம் தேதி வரை 266 பேர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் பதிவுகள் கூறுகின்றன.

இவர்களில் 25 விழுக்காட்டினர் கடன் சுமையாலும் 24 விழுக்காட்டினர் குடும்பப் பிரச்சினைகளாலும் 23 விழுக்காட்டினர் மண வாழ்க்கை சிக்கல்களாலும் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இவை அனைத்துக்குமே மூலகாரணம் கோவிட்-19 தான்.

சராசரியாக ஒரு மாதத்தில் 30 பேர் என்ற ரீதியில் ஒவ்வொரு நாளும் ஒருவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர். இத்தகவலை வெளியிட்டவர் அரச மலேசிய போலீஸ் படையின் புக்கிட் அமான் நிர்வாகப் பிரிவு இயக்குநர் டத்தோ ரம்லி டின்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவுதலை முறியடிப்பதற்கு அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (எம்சிஓ) அமல்படுத்தியதில் நாடே முடங்கிப் போனது. கொரோனா தொற்று மனித உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருப்பது ஒருபுறமிருந்தாலும் இந்த முடக்கத்தால் ஏற்பட்ட பணி, வருமான இழப்பு மக்களின் வாழ்வாதாரத்தைப் பந்தாடியது.

இந்த நெருக்கடி காலகட்டத்தில் காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்டவர்களும் இருக்கவே செய்கின்றனர். கிட்டத்தட்ட 15 விழுக்காட்டினர் காதல் தோல்வியால் – பிரச்சினைகளால் தற்கொலை செய்துகொண்டிருப்பதையும் டத்தோ ரம்லி டின் சுட்டிக்காட்டினார்.

இத்தற்கொலை பட்டியலில் 47 சம்பவங்களைப் பதிவுசெய்து ஜோகூர் முன்னிலை வகிக்கிறது. சிலாங்கூரில் 39 பேர், கோலாலம்பூரில் 28 பேர், மற்றவர்கள் இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தற்கொலை செய்து கொண்டவர்களுள் 78 விழுக்காட்டினர் ஆண்கள், 22 விழுக்காட்டினர் பெண்கள்.

போலீஸ் தரவுகளின்படி தற்கொலை செய்துகொண்டிருக்கும் 266 பேரில் 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் 53 விழுக்காட்டினர். 41 வயது, அதற்கு மேலானவர்கள் 24 விழுக்காட்டினர். 15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள் 23 விழுக்காட்டினர் ஆவர்.

மொத்தம் 189 பேர் தூக்குப்போட்டு உயிரை விட்டிருக்கின்றனர். 37 பேர் உயரமான கட்டடங்களில் இருந்து கீழே குதித்து உயிர் துறந்தனர். 14 பேர் விஷமருந்தியும் சுயமாக காயப்படுத்திக்கொண்டு 13 பேரும் தற்கொலை செய்துகொண்டனர். 13 பேர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டும் கார் கரியமிலவாயு புகையைச் சுவாசித்து 13 பேரும் உயிரிழந்திருக்கின்றனர்.

வேலை இழப்பு, வருமான இழப்பு, கடன் பிரச்சினை, குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத நிலை போன்றவற்றினால் ஏற்பட்ட மன அழுத்தங்கள் போன்றவற்றில் இருந்து மீண்டு வரும் வழி தெரியாமல் மனமொடிந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் நிலை நமது மனநிலையை வெகுவாகவே பாதிப்பதாக உள்ளது.

இந்தத் தற்கொலைகளுக்குப் பின்னர் அவர்களின் குடும்பங்கள் படும் பாட்டை யார் அறிவர்? எல்லா துன்பங்களுக்கும் மரணம்தான் தீர்வு என்றால் இந்நாடு இந்நேரம் பாதி சுடுகாடாக மாறியிருக்கும்.

பசி – பட்டினி என்று பரிதவிப்போரைக் கைவிடுபவர்கள் அல்லது கண்டுகொள்ளாதவர்கள் மலேசியர்கள் அல்லர். இனம், மதம், சமய வேறுபாடின்றி அன்னமிட்டு வருபவர்களை நாளும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

இந்தக் கோவிட்-19 நெருக்கடி காலத்தில் யார்தான் பாதிக்கப்படவில்லை? அத்தனை பேரும் தற்கொலை செய்துகொண்டால் இந்தப் புண்ணிய பூமியின்  தன்மைதான் என்ன?

துன்பங்களில் – துயரங்களில் இருந்து போராடித்தான் மீண்டு வரவேண்டும். போராட்டம் இல்லாத வாழ்க்கையை வாழ்பவர் யாராவது உண்டா? நேற்று நன்கு வாழ்ந்தவர் இன்று அனைத்தையும் இழந்து பரிதவிக்கிறார். அப்படியிருந்தும் நம்பிக்கையோடு போராடுகிறாரே?

இன்றைக்கு ஒவ்வொருவருக்கும் தேவை நிதானம், பொறுமை, தைரியம், போராடும் குணம். இன்றைய துன்பங்கள் – நாளைய மகிழ்ச்சி. நம்மை நாம் நம்புவோம். நம்பிக்கையே வாழ்க்கை.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here