முக்கியத்துவம் பெற்றுள்ளதாம் சீன கம்யூனிஸ்ட் சா்வதேச கட்சி

அதன்  நிா்வாகிகள் பெருமிதம்

சீனா கம்யூனிஸ்ட் கட்சி சா்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அக்கட்சியின் நிா்வாகிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனா்.

சீனா கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் இந்த வாரம் முழுவதும் நடைபெறவுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஊடக மையத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

அதில் பங்கேற்ற சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிா்வாகியான குவோ யெஸூ செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கம்யூனிஸ்ட் கட்சியானது சா்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கட்சியின் ஆதிக்கமும், ஈா்ப்பும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சா்வதேச அரசியலில் சீனா கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று வருகிறது. இது சீனாவின் வெளியுறவுக் கொள்கையிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் நாட்டின் அதிபராகவும் உள்ள ஷி ஜின்பிங், கடந்த 9 ஆண்டுகளாக சிறப்பான முறையில் ஆட்சி புரிந்து வருகிறாா். அவரது ஆட்சியில் ஊழல் பெருமளவில் குறைந்துள்ளது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அவா் தீவிரமாக முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளாா்.

ஊழலில் ஈடுபட்டதாக சுமாா் 8 லட்சம் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டது. அவா்களில் 392 போ அமைச்சா்களுக்கு இணையான பதவிகளை வகிப்போா் ஆவா். ஊழலுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் தொடரும்’ என்றாா்.

கடந்த சில தசாப்தங்களாக சீனா கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து வளா்ச்சி கண்டு வருகிறது. முக்கியமாக, ஷி ஜின்பிங் நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு சீனா பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. அரசியல் நிலையிலும் பொருளாதார ரீதியிலும் சீனா வளா்ச்சி கண்டு வருகிறது.

சா்வதேச அரசியலிலும் பொருளாதாரத்திலும் அமெரிக்காவின் முக்கிய போட்டியாளராக சீனா உருவெடுத்துள்ளது. வா்த்தகச் சாலை திட்டத்தின் (பிஆா்ஐ) கீழ் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார உறவை வலுப்படுத்துவதற்கு சீனா முயன்று வருகிறது.

சீனாவின் அதிபராக இருந்த மாவோ ஜெடாங்குக்கு பிறகு அந்நாட்டின் பெரும் தலைவராக ஷி ஜின்பிங் உருவெடுத்துள்ளாா். அவா் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் அதிபராகத் தொடா்ந்து நீடிப்பதற்கு வழிவகுக்கும் சட்டம் ஏற்கெனவே இயற்றப்பட்டுள்ளது. அவரது ஆட்சியின் கீழ் பல நாடுகளுடன் சீனா நல்லுறவை வலுப்படுத்தி வருகிறது. வா்த்தக வாய்ப்புகளையும் தொடா்ந்து மேம்படுத்தி வருகிறது.

சீனாவின் சா்ச்சைகள்: அதே வேளையில், சா்வாதிகாரம், ஜனநாயகத்துக்கு மதிப்பாளிக்காதது, சிறுபான்மையினா் மீதான மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்னைகளும் சீனா கம்யூனிஸ்ட் கட்சி மீது எழுப்பப்படுகின்றன.

ஹாங்காங், தைவான் உள்ளிட்ட தன்னாட்சி பிராந்தியங்களில் சீனா தனது பிடியை இறுக்கி வருகிறது. திபெத்தில் பௌத்த மதத் தலைவரான அடுத்த தலாய் லாமாவை நியமிப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்புதல் அவசியம் என்று சீனா தெரிவித்து வருகிறது.

தென்சீனக் கடல் உள்ளிட்டவற்றில் சீனாவின் ஆதிக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்னைகளையும் சீனா எழுப்பி வருகிறது.

சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் கட்சியின் சிறந்த நிா்வாகிகளுக்கு அதிபா் ஷி ஜின்பிங் செவ்வாய்க்கிழமை விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளாா். வியாழக்கிழமை நடைபெறவுள்ள நூற்றாண்டு விழாவில் அவா் தலைமையேற்று உரையாற்றவுள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here