பதவி விலகப் போவதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

டந்த ஒன்பது ஆண்டுகளாக கனடியப் பிரதமராகப் பதவி வகித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவின் ஆளும் முற்போக்குக் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக நேற்று திங்கட்கிழமை (ஜனவரி 6) அறிவித்தார். இருப்பினும் கட்சி அடுத்த தலைவரை தேர்வுசெய்யும் வரை தாம் இப்பதவியில் தொடர்வதாக அவர் கூறினார்.

வரும் தேர்தலில் முற்போக்குக் கட்சி படுதோல்வியைச் சந்திக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறும் வேளையில், பதவி விலகக் கோரி கட்சியினரிடமிருந்து ட்ரூடோ கடும் நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில், மார்ச் 24ஆம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டங்கள் நிறுத்திவைக்கப்படும் என செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார். அதன்படி, ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்கும்போது ட்ரூடோ பிரதமராக தொடர்வார்.

“திடமான, தேசிய அளவில் போட்டித்தன்மைமிக்க செயல்முறை மூலம் கட்சி அதன் அடுத்த தலைவரைத் தேர்வுசெய்த பிறகு கட்சித் தலைவர், பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள நான் எண்ணம் கொண்டுள்ளேன்,” என்று அவர் சொன்னார்..

2015 நவம்பரில் பிரதமராகப் பதவியேற்ற ட்ரூடோ, 53, இருமுறை தேர்தல்களில் வென்றதன் மூலம் கனடாவில் மிக நீண்டகாலம் பிரதமர் பதவியில் இருந்தவர்களில் ஒருவராக உள்ளார்.

ஆனால், விலைவாசி உயர்வு, வீடமைப்புப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ஈராண்டுகளுக்கு முன்பு அவரது செல்வாக்கு சரியத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here