நீருக்கடியில் அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா

நீருக்கடியிலான அணு ஆயுத சோதனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் ஆளுமையின் கீழ் உள்ள இரண்டு தீவுகளின் சமீபத்தில் வடகொரியா ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்தது. இதனை அடுத்து கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் படைகளுடன் தென் கொரிய ராணுவம் கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் நீருக்கடியிலான அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டில் அதிகாரப்பூர்வ இணையதளமான கே.சி.என்.ஏ.வில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ஆழ்கடல் அணுகுண்டு தாக்குதல் அமைப்பை வடகொரியா ராணுவம் வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”ஹெய்ல்-5-23” (Haeil-5-23) ட்ரோன் அமைப்பின் சோதனையானது அதன் கிழக்கு கடற்கரையில் நடத்தப்பட்டதாக அரசு நடத்தும் நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. ஆனால், சோதனைகள் எப்போது நடந்தது என்பதைக் குறிப்பிடவில்லை.

இது தொடர்பாக வட கொரிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் “அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து நடத்திய பயிற்சிகள் வட கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே பதிலடி கொடுக்கும் வகையில், கொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வரும் நீர்மூழ்கி அணு ஆயுத அமைப்பான ‘ஹெய்ல்-5-23’-ன் முக்கியமான சோதனை நடத்தப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய மொழியில் ஹெய்ல் என்றால் சுனாமி என்று பொருள். இது கதிரியக்க சுனாமியை உருவாக்கக்கூடிய வல்லமை படைத்தது என்றும் வட கொரியா தெரிவித்தது. ஆனால், வட கொரியாவிடம் உண்மையில் அத்தகைய சக்திவாய்ந்த ஆயுதம் உள்ளதா எனவும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here