ஒரே வானம் ஒரே பூமி – ஒரே சேவை, ஒரே வேலை!

சலுகைகள் மட்டும் தனித்தனி!

இத்தொடரின் 2ஆம் பாகத்தில் நாம் இணைந்திருக்கிறோம். இளம் ஒப்பந்த டாக்டர்களின் போராட்டங்களையும் அதற்கான ஆணிவேர் காரணங்களையும்  அலசியிருந்தோம்.
இருக்கு ஆனா இல்லை என்பதுதான் இந்த இளம் ஒப்பந்த டாக்டர்களின் நிலை. அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் ஒவ்வொரு நாளும் அனலில் விழுந்த புழுவாக இவர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்றளவும் சுமார் 23,000 மருத்துவப் பட்டதாரிகள் அரசாங்க மருத்துவச் சேவையில் இணைந்தனர். ஆனால், இவர்களில் 700 பேர் மட்டுமே நிரந்தர மருத்துவ அதிகாரிகளாக அரசாங்க சுகாதார பரிவுச் சேவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

மற்றவர்கள் பொறியில் சிக்கிய எலிபோல திண்டாடி அலைமோதிக் கொண்டிருக்கின்றனர். அல்லது ஒப்பந்த சுகாதார சேவைப் பணியாளர் என்ற முத்திரையுடன் பணிச் சுமைகளைச் சுமந்துக் கொண்டிருக்கின்றனர்.

எத்தனை கனவுகளுடன் இந்த இளம் மருத்துவப் பட்டதாரிகள் படித்திருப்பர்? இவர்களைப் படிக்க வைப்பதற்கு இவர்களின் பெற்றோர் – உடன்பிறப்புகள் எவ்வளவு துன்பங்களைச் சுமந்திருப்பர் – யார் யார் காலில் விழுந்திருப்பர்?

மருத்துவத் துறையில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு வெறியில் படிப்பை முடித்துக்கொண்டு வெளியில் வந்தால், ஒரு தொழிற்சாலை ஊழியரைவிட மோசமாக இருக்கிறது இவர்களது நிலை!

ஒப்பந்த டாக்டர்கள் – நிரந்தர டாக்டர்கள்; இருவருக்குமே வேலை என்று ஒன்று இருக்கிறதே… அப்புறம் ஏன் இத்தனை அலட்டல்? அவர்களது இப்பிரச்சினை எப்படி மற்றவர்களைப் பாதிக்கும்? என்று நீங்கள் நினைக்கலாம்.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால் சில பிரச்சினைகள் – சிக்கல்கள் தலைதூக்கலாம். அவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால்தான் அவர்களது துன்பங்களும் ஏமாற்றங்களும் வலியும் புரியும் – தெரியும்.
ஒப்பந்த டாக்டர்கள் அரசாங்க நிபுணத்துவ (ஸ்பெஷலிஸ்ட்) பயிற்சிகளில் – உயர் கல்வி வாய்ப்புகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் இல்லை.

அந்த வாய்ப்பு அவர்களைப் பொறுத்தவரை ஓர் எட்டாக் கனிதான். நிபுணத்துவக் கல்வியைப் பெற முடியாமல் ஒரு நிபுணத்துவ டாக்டர் ஆகும் அவர்களது கனவு காற்றில் கலைந்துப் போகிறது.

ஒரு நீண்ட கால நடைமுறையில் – காலங்கள் கடக்கும் நிலையில் இப்போது உள்ள நிபுணத்துவ டாக்டர்கள் கட்டங்கட்டமாகப் பணி ஓய்வு பெறலாம். அவர்களது இடத்தை நிரப்பக்கூடிய புதிய நிபுணத்துவ டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும் போதுமான எண்ணிக்கையில் இருக்காது.

நிரந்தரப் பதவிகளுக்கான தேர்வில் பின்பற்றப்படும் ஓர் அளவுகோல் என்ன என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை. நிரந்தரப் பதவிகளுக்கு மருத்துவ அதிகாரிகள் எப்படி தேர்வு செய்யப்படுகின்றனர் என்ற உண்மை யாருக்குமே தெரிவதில்லை. எல்லாமே மூடுமந்திரம்தான்.

இந்த ஒப்பந்த டாக்டர்களின் தொழில் முன்னேற்றத்திற்குரிய எந்தவொரு முறையான திட்டமும் கிடையாது. பதவி உயர்வு – சம்பள உயர்வு என்று எதுவுமே கிடையாது.

அதே சமயத்தில் நிரந்தர மருத்துவ அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வோர் ஆண்டும் கிரேட் உயர்வும் சம்பள உயர்வும் இயல்பாகவே கிடைக்கும். இது வெட்ட வெளிச்சமான – அனைவருக்கும் தெரிந்த உண்மை.

ஆனால், தெரியாத உண்மை – இந்த இளம் ஒப்பந்த டாக்டர்களுக்கு இப்படி எதுவும் இல்லை என்பதுதான். இவர்களது எதிர்காலம் தெளிவில்லாமல் ஒளி குன்றி மங்கலாகவே இருக்கிறது – தெரிகிறது.
ஒரே மாதிரியான வேலை – வருமானத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய இடைவெளி.

ஆனால், பணிச்சுமையைப் பொறுத்தவரை இவர்கள் பிழிந்தெடுக்கப்படுகின்றனர். ஓரிரு நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் நிலையும் உண்டு.

நிரந்தரமாக்கப்பட்ட மருத்துவர்களுடன் ஒப்பிடுகையில் ஒப்பந்த டாக்டர்களுக்கும் இடையிலான வருமானம் என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. ஒரே வேலை – ஒரே சேவை – வருமானம்; பதவி மட்டும் எட்டாக்கனிதான்!

பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here