6,057 ஆத்மாக்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம்

கோவிட்-19 மரண எண்ணிக்கை பெரும் பீதியையும் பயத்தையும் ஏற்படுத்திவருகிறது. இந்த மரண எண்ணிக்கையைப் பொறுத்தவரை மலேசியா இந்தியாவையே மிஞ்சிவிட்டது.

2020, மார்ச் மத்தியில் தொடங்கி 2021 ஜூலை 10ஆம் தேதி வரையில் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலான காலகட்டத்தில் மொத்தம் 6,057 பேர் கோவிட்-19 கொடுந்தொற்றுப் பரவலுக்குப் பலியாகி இருக்கின்றனர்.

ஓரிலக்கத்தில் இருந்த மரண எண்ணிக்கை இன்று மூன்று இலக்கங்களாக அதிகரித்திருப்பது கிருமித் தொற்றின் கடுமையைப் பிரதிபலிக்கிறது.

அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள தீவிரக் கண்காணிப்புப் பிரிவுகளில் (ஐசியூ) அனுமதிக்கப்படும் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இங்கு ஏற்பட்டிருக்கும் மருத்துவ வசதிகள் பற்றாக்குறை பலரின் மரணங்களுக்குக் காரணமாக இருக்கின்றது என்பது நிதர்சன உண்மை.

தொற்றுப் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. சிறார் முதல் முதியவர் வரை இக்கொடுந்தொற்று யாரையும் விட்டு வைக்கவில்லை. இளம் வயதினரும் அண்மைக் காலமாக உயிரிழக்கின்றனர். கர்ப்பிணிபிபெண்கள் மரமடைகின்றனர். தடுக்க முடியாமல் மருத்துவம் திணறுகிறது.

இவ்வாறு இறப்பவர்களை வீட்டிற்குக்கூட கொண்டு வர முடியாமல் மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்து நேரடியாக மயானத்திற்கும் மின்சுடலைக்கும் கொண்டுசெல்லப்பட வேண்டிய கொடுமையை ஒவ்வொரு நாளும் கண்கூடாகப் பார்க்கிறோம்.

சடங்குகள் செய்வதற்கும் இறுதி மரியாதை செலுத்துவதற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். கண்ணாடிக்கு அந்தப் பக்கம் உடல்கள் வைக்கப்பட்டிருக்க இந்தப் பக்கம் உறவுகள் கதறித் துடிக்கும் காட்சிகள் ஜென்ம ஜென்மத்திற்கும் மறக்க முடியாது.

கடைசி நேரத்தில் முகம் பார்க்கக்கூட அனுமதியில்லை. சிறுசடங்குகள் விரைவில் முடிக்கப்பட்டு சவப்பெட்டி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு ஆணி அடிக்கப்படுகிறது. அத்தோடு எல்லாமே முடிந்துபோகிறது.

நெருங்கிய உறவுகளின் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறுபவர்களின் குரல்கள் இறந்தவர்களின் காதுகளில் விழுகின்றதோ இல்லையோ, உயிரோடு இருப்பவர்களுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை ஒலியாகத் திக்கெட்டு திசையைும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த மரணப் பயத்தையும் மீறி சிலர் நடந்துகொள்ளும் போக்கு சினமூட்டுகிறது. கொரோனா என்னை என்ன செய்துவிடும் என்று சவால்விட்டு தன்மூப்பாக நடந்துகொள்பவர்களை என்னவென்று சொல்வது?
இவர்களது குடும்பத்திலும் இக்கொடிய மரணம் நிகழ்ந்தால் தான் அடங்குவார்களா? (அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பது நமது பிரார்த்தனை) தங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் தரிகெட்டு திரிகின்றவர்கள் அபாயம் உணர்ந்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

குறுகிய காலத்தில் 6,057 பேரைப் பறிகொடுத்திருக்கிறோம். இவர்கள் நமது உறவுகளாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், இவர்களுக்காக நம் மனம் அழுகிறது.

இனம், மதம், சமயம், நிறம் எனும் கோடுகளை அழித்துவிட்டு சக மனிதர்கள் என்ற ரீதியில் இவர்களுக்காக நாம் அழுகிறோம். இந்த இறப்புகள் தொடர வேண்டாம் என்று பிரார்த்திக்கிறோம்.

இழந்தது இழந்ததாகவே இருக்கட்டும் – இனியும் வேண்டாம் உயிர் இழப்புக்கள். இதுதான் இனி நம்முடைய பிரார்த்தனையாக இருக்கட்டும்.

கோவிட்-19 கொடுந்தொற்று சாமானிய மலேசிய மக்களிடையே அண்மைக் காலமாகப் பெரும் நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மலேசியர்கள் என்ற பொதுவான உணர்வோடு ஒருவருக்கொருவர் ஆறுதல் – ஆலோசனைகள் சொல்வது மனிதம் உயிர்பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

அரசியல் சித்து விளையாட்டுகளாலும் சமயப் பிரிவினைவாதங்களாலும் சிறிது காலம் பிளவுப்பட்டிருந்தோம். கோவிட்-19 கற்றுத் தரும் பாடங்களால் இப்போது மனங்களால் பிணைக்கப்பட்டு வருகிறோம்.

கோவிட்-19 காவு கொண்டிருக்கும் இந்த 6,057 பேர் யாராகவும் எந்த மதத்தினராகவும் இருக்கட்டும். இந்த ஆத்மாக்களுக்காக நாம்  பிரார்த்தனை செய்வோம். இவர்களின் ஆத்மா சாந்திபெறட்டும் – அமைதி அடையட்டும்.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here