கோலாலம்பூர், ஜூலை 14:
நாட்டில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இரு மாதங்களாகின்றது. ஆனால் கோவிட் -19 தொற்று அதிகரித்து வருகின்றது. அதிலும் நேற்றைய புதிய தொற்று 11,000த்தை தாண்டியிருப்பது நாட்டிற்கு பெரும் சவாலாக உள்ளது. நோயை கட்டுக்குள் கொண்டு வரத்தவறிய சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும் என்கிறார் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தோனி புவா.
தொற்றுக்களை குறைப்பதற்கு தனிமனிதர்கள் அனைவரும் தங்களாலான உச்சக்கட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதுடன் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்கின்றனர் மேலும் அரசின் கட்டளைகளையும் பின்பற்றி வருகின்றனர்.
கோவிட் -19 தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் தங்கள் பங்கைச் செய்யத் தவறியதால் அடாம் பாபா மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் தலைமையிலான அரசாங்கம் “மக்களின் தியாகத்தை வீணடித்தது” என்று தோனி புவா கூறினார்.
மேலும், நேர்மறையான விகிதங்கள் அதிகரித்ததற்கு முக்கியமான காரணம் சுகாதார அமைச்சகம் குறைவான சோதனைகளை நடத்தியது என்பதே இந்த தோல்விக்கான மிகத் தெளிவான சான்று என்றார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் கோவிட் தொற்று அதிகரிக்கின்றது என்று தொடர்ந்து கூறிவரும் அரசு அதனை தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக அரசாங்கம் கோவிட் -19 யை கட்டுப்படுத்தும் முயற்சியில் தோல்வி அடைந்து விட்டது.
சுகாதார அமைச்சரின் திறமையின்மையால் தொற்று நோய்களின் போது வாழ்க்கையில் வருமானம் எதுவும் இன்றி போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மலேசியர்களுக்கும் பல பில்லியன் கணக்கில் பண இழப்புக்கள், வலிகள் , மன உளைச்சல்கள் போன்றவற்றை ஏற்படுத்தியிருக்கின்றன.
எனவே “சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா பதவி விலகத் தவறினால், மலேசியாவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு திறமையற்ற சுகாதார அமைச்சரை பணிநீக்கம் செய்வது (BN) அரசாங்கத்திற்கு கட்டாயமாகும்” என்று தோனி புவா ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.





















