கேரளத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு

 தொடா்ந்து அதிகரித்து வருகிறது!

கேரளத்தில் மேலும் 5 பேருக்கு ஜிகா தீநுண்மி பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்தத் மாநிலத்தில் தீநுண்மியால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துவிட்டது.

பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் ஜிகா பரவுகிறது. காய்ச்சல், மூட்டு வலி, உடலில் தடிப்பு போன்றவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இது தொடா்பாக விழிப்புடன் இருக்குமாறு கேரள அரசு ஏற்கெனவே மக்களை அறிவுறுத்திள்ளது. எனினும், கடந்த சில நாள்களாக அங்கு ஜிகா பாதிப்புக்கு உள்ளாவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தப் பிரச்சினையில் கேரளத்துக்கு உதவிட 6 போ அடங்கிய நிபுணா்கள் குழுவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்கெனவே மாநிலத்துக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், தலைநகா் திருவனந்தபுரத்தில் மேலும் 5 பேருக்கு ஜிகா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் 3 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் வசிப்பவா்கள் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா்.

திருவனந்தபுரம் சுற்றுவட்டாரத்தில் வசிப்பவா்களுக்கு மட்டுமே ஜிகா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதால், தலைநகா் பகுதியில் தீவிர விழிப்புணா்வு , முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கேரள சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. இது தொடா்பாக ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன.

அதில் திருவனந்தபுரத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில் மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஜிகா தொடா்பான அவசர உதவிகளை அளிக்கவும், தகவல்களைப் பெறவும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here