பதில், வருமா? வராதா?

சாமானியர்களின் கேள்விகள்

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் சாமானிய மக்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சாமானியர்களுக்கும் பதவி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இடையே என்ன வேறுபாடு? தங்களுக்கு ஒரு சட்டம், சாமானிகளுக்கு ஒரு சட்டமா என்பது அவர்களின் முதலாவது கேள்வியாக உள்ளது.

கடந்த ஆண்டு கோவிட்-19 கிருமித் தொற்றுப் பரவல் காலத்தில் ஒரு சீன வயோதிகர் வயிற்றுப் பசிக்காக உணவு வாங்கக் காத்திருந்தபோது போலீசார் பிடித்துச் சென்றனர். அவருக்கு 1,000 வெள்ளி அபராதமும் விதித்தனர்.

ஓர் ஆதரவற்றவரா அந்த வயோதிகர் ஒட்டுக்குடிசயைில் வாழ்ந்து வந்தார். பௌத்த இயக்கத்தினர் மதிய வேளையில் வழங்கும் உணவைப் பெற்றுச் செல்ல கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து காத்திருந்தார்.

எவ்வளவு மன்றாடியும் கோவிட்-19 விதிமுறைகளை மீறிவிட்டதாகக் குற்றப் பதிவுசெய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வயோதிகர்களுக்கு இறைவன் துணை இருப்பான் என்பது அவரின் விஷயத்தில் உண்மையானது.

தகவல் அறிந்து அவரைத் தெரிந்த அனைத்து இன அக்கம்பக்கத்தார் உடனடியாகப் பணம் திரட்டி அவரை மீட்டுச் சென்றனர். இது நியாயமா என்பது சாமானியர்களின் இரண்டாவது கேள்வி.

கடந்த ஹரிராயா காலத்தில் போலீஸ் தடுப்புச் சோதனையில் கடமையில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரரை அவரின் மனைவியும் பிள்ளைகளும் வந்து பார்த்து ஆசி பெற்றனர்.

இது ஒரு மகாப் பெரிய குற்றம் என்று போலீஸ் அதிரடியாகக் களமிறங்கி அந்த மனைவிக்கு 2,000 வெள்ளி அபராதம் விதித்தது.

அதிர்ச்சியில் உறைந்துபோன மலேசியர்கள் இன, மத பேதமின்றி அந்த அபராதத் தொகையைச் செலுத்த முன்வந்தனர்.

போலீஸ் படையின் கடமை உணர்வை பாராட்டும் அதேவேளையில் அந்த மனைவியும் பிள்ளைகளும் இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதிக்கக்கூடிய தவற்றையா செய்துவிட்டார்கள்? இது மனிதாபிமானமா என்பது சாமானியர்களின் மூன்றாவது கேள்வி.

கோவிட்-19 கொடுந்தொற்று நாட்டையும் மக்களையும் உக்கிரமாகச் சூறையாடிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் முடிதிருத்தும் தொழில் முற்றாக முடக்கப்பட்டிருக்கிறது.

முடிவெட்டிக்கொள்ளாமல் சாமானியர்கள் தலைமுடி வளர்ந்து, தாடி காடுபோல் மண்டிப் போயிருப்பதால் ஒருவித மன இறுக்கத்தில் உள்ளனர். முடிவெட்டாமல் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் வருமானம் இன்றிப் பரிதவிக்கின்றனர்.

ஆனால், இந்த விதிமுறைகளையும் சட்டங்களையும் விதிக்கின்ற அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் பலர் முடிவெட்டிக் கொண்டு முகப்பொலிவுடன் மிக நேர்த்தியாக இருக்கின்றனர். இது எப்படி சாத்தியம்?

சாமானியர்கள் ஒளிந்து மறைந்து முடிவெட்டிக்கொண்டால் முடிவெட்டுபவரோடு சேர்த்து அள்ளிச் செல்கின்றது சட்டம். ஏன் இந்த இரட்டைப் போக்கு என்பது  சாமானியர்களின் நான்காவது கேள்வி.

எஸ்ஓபி விதிமீறல்களுக்குச் சாமானியர்களுக்கு 50,000, 20,000, 10,000, 5,000, 2,000 வெள்ளி என அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், இதேபோன்ற விதிமீறல்களுக்காக கெடா மந்திரி பெசார் முகம்மட் சனுசி முகமட் நோருக்கு 1,500 வெள்ளி மட்டுமே அபராதம்.
அதேபோல் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசாவுக்கு 2,000 வெள்ளி அபராதம். 2,001 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் இவர்களின் பதவிகள் காலியாகி சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்துவிடும் என்ற பயமா? இது சாமானியர்களின் ஐந்தாவது கேள்வி.

(பின்குறிப்பு: நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு குற்றச்சாட்டில் 2,001 வெள்ளிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டால் அவர்களின் தொகுதி காலியாகிவிடும்).

கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் மரண எண்ணிக்கைகள் எகிறிக்கொண்டிருக்கின்றன. இவ்விவகாரத்தில் தோற்றுப் போயிருப்பதை ஒப்புக்கொள்ளும் திராணி நடப்பு அரசாங்கத்திற்கு உண்டா? இது சாமானியர்களின் ஆறாவது கேள்வி.

இது வெறும் டிரெய்லர் மட்டுமே. ஆயிரக்கணக்கான கேள்விகளைச் சாமானியர்கள் அவர்களுக்குள் சுமந்துகொண்டுள்ளனர்.

இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றாக துளிர்விடும்போது அதிகாரத்தில் உள்ளவர்களால் பதில்சொல்ல முடியுமா? இல்லை தொடர் மௌனம் தானா?

இப்போதைக்கு ஆறுவது சினம்- இதுதான் சாமானியர்கள்

பி.ஆர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here