ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்- குலா வேண்டுகோள்

ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், மருந்தகர்கள் இவர்களின் ஒப்பந்த காலம் மேலும் 2 வருடங்கள் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் முஹடின் நேற்று தெரிவித்திருந்தார். பிரச்சனையை தீர்க்காமல் அதை மேலும் இரண்டு வருடங்களுக்கு தள்ளி போட்டுள்ளார்.

மேலும் இரண்டு வருடங்கள் முஹடின் பதவியில் தாக்குப்பிடிப்பாரா என்பதே கேள்விக் குறியாக இருக்கும் போது , இந்த அறிவிப்பை செய்வதன் மூலம் அவர் இந்த பிரச்சனைகளிலிருந்து தற்காலிமாக தப்பிக்கப்பார்க்கிறார் என்றே புலப்படுகிறது என்று முன்னாள் மனித வள அமைச்சரும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜசெகவின் தேசிய உதவித் தலைவருமான மு.குலசேகரன் கருத்துரைத்தார்.

நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டுள்ள மருத்துவ அதிகாரிகள் முழுச்செலவு மற்றும் விடுமுறையுடன் கூடிய நிபுணத்துவப் பயிற்சிகளுக்கு செல்லும் வாய்பை பெறுகின்றனர். மத்திய அரசாங்கப் பயிற்சி சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதே சலுகைளை ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளும் பெற வேண்டும் என்பதில் அமைச்சரவை ஒரே மனதுடன் ஒப்புக்கொண்டுள்ளது என்று மேலும் அவர் சொல்லியிருக்கிறார். இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பதை மருத்துவ துறையில் உள்ளவர்கள் அறிவார்கள்.எப்பொழுதுமே சுகாதாரத் துறையில் நிபுணத்துவ பயிற்சிகள பெறுவதற்கு அதிக விண்ணப்பங்களும் குறைந்த வாய்ப்புக்களும் இருக்கும்.

இந்த நிலையில் எப்பொழுதும் நிரந்தரப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுதான் நியாயம். இங்கே ஒப்பந்த பணியாளர்களுக்கு வாய்ப்பு கிட்டுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி வெறும் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே அவர்களின் சேவைகளை நீட்டித்திவிட்டு 4 முதல் 8 வருடங்கள் வரை தேவைப்படும் நிபுணத்துவ பயிற்சிகளுக்கு சம வாய்புக்கள வழங்கப்படும் என்று கூறுவது எப்படி சாத்தியமாகும் என்பது விளக்கப்படவில்லை . இந்த நிரந்தமில்லாத தீர்வை ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் மருத்துவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது மற்றொரு கேள்வி .

அரசு சேவையிலுருக்கும் மற்ற அதிகாரிகளுக்கு ஓத்த சம்பள ஏற்ற முறையில் மருத்துவர்களையும் மற்ற அரசு அதிகாரிகளுடன் ஒப்பிடும் போது மருத்துவர்களின் வேலை பளு பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த கோவிட் 19 காலக்கட்டங்களில் அரசு அதிகாரிகளில் அதிகமானோர் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்பட்டிருகின்றார்கள்.இந்த அனுகூலம் மருத்துவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்களின் வேலை நேரம் குறைந்த பட்சம் 8 மணியிலிருந்து 12 மணி நேரம் வரை இருக்கிறது, சில வேளைகளில் 24 மணி நேரம் கூட நீடிக்கிறது.

இதுமட்டுமல்லாமல் மருத்துவர்கள் அவர்கள் வேலை செய்யும் நேரம் முழுவதும் தங்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சூழ் நிலையில் இருகிறார்கள். அவர்கள் உடுத்தும் வேலையிட உடுப்புகள் அவர்களை படாத பாடு படுத்துவனவாய் இருக்கின்றன. வேர்த்தும் விருவிருத்தும் அவர்கள் அடையும் வேதனைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அந்த உடைக்குள் இருக்கும் பொழுது அனலில் இருப்பது போல இருக்கும் . உணவு உண்ணக்கூட நேரமில்லாமல் சில வேளைகளில் தொடர்ந்து வேலை செய்யும் நிலையில் பல மருத்துவர்கள இருக்கின்றார்கள்.

பலர் கோவிட் நோயாளிகளுக்கு சிகிட்சை அளிக்கும் போது அந்த தொற்று பரவி இறந்தும் போயிருக்கிறார்கள. பல இளம் மருத்துவர்கள் வேலை பளு தாங்காமல் 24 மணி நேர நோட்டீஸ் கொடுத்து வேலையை விட்டு விலகவும் முடிவு செய்துள்ளனர்.பலர் மன உளைச்சளுக்கு ஆளாகி மன நல மருத்துவ ஆலோசனை தேவைப்படும் அளவிற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். சில வேளைகளில் மருத்துவ பணியாளர்கள கோவிட் காரணமாக மரணிக்கும் நொயாளிகளை மயானம் வரையில் சென்று அடக்கம் செய்ய வேண்டிய பொறுப்பையும் மேற்கொள்கிறார்கள்.

இதே மாதிரியான சூழலை மற்ற எந்த அரசு அதிகாரிகளும் எதிர் நோக்குவதில்லை .
இந்த வேலை பளுவும் அழுத்தமும் எல்லா காலக்கட்டங்களிலும் இருந்து வந்துள்ளது.. ஆனால் இப்பொழுது இந்த கோவிட் காலக்கட்டத்தில் இது பன் மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் இருக்கும் மருத்துவர்களுக்கு வேலையில் உத்ராவாதம் இல்லை .நாட்டில் உள்ள 23,077 ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களில் வெறும் 789 மருத்துவர்கள் ,அதாவது 3.47% மருத்துவர்கள் மட்டுமே நிரந்தர பணியாளர்களாக அரசு சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இது ஒரு மிகவும் வருத்தமளிக்கக் கூடிய அவல நிலை.மருத்துவ சேவைக்கு அரசாங்கம் கொடுக்கும் மிக மோசமான அங்கீகாரம் இது. அவர்கள் செய்யும் சேவை உயிர்காக்கும் புனிதமான தொழில், மற்ற அரசு ஊழியர்களுக்கு ஈடாக ஒப்பிடமுடியாத ஒரு சிறப்புச் சேவை. இந்த காலக்கட்டத்தில் மற்ற சேவைகளைவிட அதிகமாக தேவைப்படும் ஒரு சேவையும் கூட.

இதை உணர்ந்திருந்தும் கூட இந்த பெரிக்காத்தான் அரசு இவர்களுக்கு மேல் போக்காக 2 வருட வேலை நீட்டிப்பு என்பது அவர்களை அவமதிக்கும் செயலென நான் கருதுகிறன். உலக சுகாதார நிருவனம் ஒரு நாட்டில் 1 மருத்துவருக்கு 500 மக்கள் என்று இருந்தால் ஒரு நாடு மருத்துவர்கள் எண்ணிக்கையில் தன்னிறைவு பெற்றுள்ளது என்று கூறுகிறது.

நாம் இப்பொழுது அதை விட அதிகமாக 1: 454 என்ற அடிப்படையில் மருத்துவர்களை கொண்டுள்ளோம். வெறும் எண்ணிக்கை அளவில் மருத்துவர்களை கொண்டிருந்தால் மட்டும் ஒரு நாடு சுகாதாரத்தில் தன்னிறைவை அடைந்துவிட்டது என்று கூற முடியாது. சேவைத்தரமும் , மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் போதுமானதாக இருக்க வேண்டும்.அந்த வகையில் மலேசியா சுகாதாரத் துறைவில் தன்னிறைவை இன்னும் எட்டவில்லை என்றே கூறலாம்.

மருத்துவ சேவை எல்லா ஊர்களிலும் சமமாக கிடைப்பதில்லை, அதிகமான மருத்துவர்களும் , மருத்துவ மனைகளும் பெரும்பாலும் நகர் புறங்களிலேயே இருக்கின்றன. புறநகர் பகுதிகளிலும் , சபா சரவாக் போன்ற வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களிலும் போதிய மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இல்லை. பொது மருத்துவமனைகளில் குறைந்தது 2 மணி நேரமாவது ஒரு நோயாளி மருத்துவரைக்காண காக்க வேண்டியுள்ளது. அதிகமான மருத்துவர்கள் இருந்தும் ஏன் இந்த அவலம் ?

உடனடி நடவடிக்கையாக :
• ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களை உடனடியாக நிரந்தரமாக்க வேண்டும்.
• அவர்கள் சேவைக்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்
• மருத்துவர்கள அனைத்து சுகதார மையங்களிலும் சம அளவில் இருப்பதற்கு உறுதி செய்ய வேண்டும்.
• நகர்புற மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்க அதிகமான மருத்துவர்கள ஷிஃப்ட் அடிப்படையில் பணிக்கமர்த்தப்பட வேண்டும்.
• தடுபூசியை போடுவதற்கு இன்னும் அதிகாமான மருத்துவர்களைக் கிராமங்களுக்கும் , புற நகர்ப்பகுதிகளுக்கும் அனுப்பவேண்டும்.
நீண்ட கால வியுகமாக :
• அதிகமான மருத்துவமனைகளும் சுகாதார மையங்களும் கட்டப்பட வேண்டும்
• அதிகாமான மருத்துவர்கள் மருத்துவ துறையில் நிபுணத்துவம் பெற வாய்ப்பளிக்க வேண்டும்.
• பொதுச் சேவைத் துறையுடன் கலந்தாலோசித்து மருத்துவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
• உயர்க்கல்வி கூடங்களில் புதிய மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை 50% குறைக்க வேண்டும்
• அடுத்த ஆண்டு முதல் வெளி நாடு சென்று மருத்துவம் பயிலும் புதிய மாணவர்களுக்கு வேலை உத்ரவாதம் இல்லை என்பதை இப்பொழுதே அறிவிக்க வேண்டும். பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளிகளின் எதிர்காலத்தை திட்டமிட இது உதவியாக இருக்கும் என்று மு.குலசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here