நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்காலத் தடை

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி –சென்னை உயர் நீதிமன்றம்

நடிகர் விஜய்`  என்மீதான தனிநீதிபதியின் விமர்சனங்களை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், கார் வரிவிலக்கு தொடர்பாக நீதிமன்றம் சென்றதுக்கு, எனக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத் தொகையையும் ரத்து செய்ய வேண்டும்’ 

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய் ஒரு லட்சம் அபராதம் செலுத்த இடைக்கால தடை விதித்தும், தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த 2012- ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து, ரோல்ஸ் ராய்ஸின் கோஸ்ட் மாடல் காரை வாங்கினார் நடிகர் விஜய். அந்த காரை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்காக 137 சதவிகித வரி விதிக்கப்பட்டது.

காரின் விலையை விட, இந்தியாவில் இறக்குமதி வரி மிக அதிகமாக இருந்தது, மேலும் வெளிநாட்டு சொகுசுக்கார்கள் இறக்குமதிக்கு மாநிலங்கள் விதிக்கும் நுழைவு வரியும் கட்ட வேண்டும். எனவே, காருக்கான நுழைவு வரி விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

2012- ஆம் ஆண்டு அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.எஸ்.ஜனார்த்தன ராஜா, 20 சதவிகிதம் நுழைவு வரி மட்டும் கட்டிவிட்டு உங்களது வாகனத்தைப் பதிவு செய்துகொள்ளலாம் என இடைக்கால உத்தரவிட்டார். அதனடிப்படையில் விஜய் 20 சதவிகித நுழைவு வரியை செலுத்திவிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் காரை பதிவு செய்து பயன்படுத்தி வந்தார்.

விஜய்

அதனைத் தொடர்ந்து, கடந்த 2017- ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு கட்டாயம் நுழைவு வரி வழங்கவேண்டும் என மாநிலங்குகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதனடிப்படையில், விஜய்-யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் வரிவிலக்கு தொடர்பான வழக்கும் மறு விசாரணைக்காக 2021 ஜூலை 8- ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியன், “சமூக நீதிக்காகப் பாடுபடுவதாக சினிமாவில் பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி விலக்கு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல… கட்டாயப் பங்களிப்பு” என விஜய்யை கடுமையாக விமர்சித்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு லட்சம் ரூபாய் அபராதத் தொகையையும் அவருக்கு விதித்து உத்தரவிட்டார்.

நீதிபதியின் விமர்சனம்,  தீர்ப்பு குறித்து அதிருப்தி அடைந்த விஜய், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், நடிகர் விஜய் தரப்பின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.

ரோல்ஸ் ராய்ஸ் கார்

சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் நடிகர் விஜய் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்:

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த எனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியைக் கட்ட நான் தயாராக இருக்கிறேன். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் காருக்கான நுழைவு வரி கட்டப்படும். நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நான் எதிர்க்கவில்லை. மாறாக அதை மதிக்கவே செய்கிறோம். ஆனால், தனிநீதிபதியோ என்னை விமர்சித்து, தேசவிரோதி போல முத்திரை குத்தியுள்ளார். எனவே, என் மீதான தனிநீதிபதியின் விமர்சனங்களை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், கார் வரிவிலக்கு தொடர்பாக நீதிமன்றம் சென்றதுக்கு, எனக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத் தொகையையும் ரத்து செய்ய வேண்டும் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விஜய் ரோல்ஸ் ராய்ஸ்

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி-ஹேமலதா அமர்வு, ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய் ஒரு லட்சம் அபராதம் செலுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை நீதிமன்றம்.

மேலும், “நடிகர் விஜய்யை விமர்சித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியனின் கருத்துக்களை நீக்குவது பற்றி 4 வாரங்களுக்குப் பின்னர் விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை, வணிக வரித்துறை ஒரு வாரத்தில் கணக்கிட்டு சொல்ல வேண்டும், மீதமுள்ள 80 சதவீத வரித்தொகையை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும்” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here