(கோகி கருணாநிதி)
கூலாய் மாவட்டத்தின் புக்கிட் பத்து, புக்கிட் பெர்மாய், செனாய் ஆகிய மூன்று தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் வெற்றி பெற வேண்டும் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாஃபிஸ் காசி வலியுறுத்தியுள்ளார்.

புக்கிட் பத்து தொகுதியில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தேர்தல் என்பது வெறும் அரசியல் போட்டி அல்ல, மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் பொறுப்பு என்று கூறினார். தேர்தல் காலத்தில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குவது பாரிசான் நேஷனலின் அரசியல் கலாச்சாரம் அல்ல என்றும், சொல்வதைச் செய்வோம், செய்வதை மட்டுமே சொல்வோம் என்பதே தங்களின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் வீட்டு வசதி, சாலை மேம்பாடு, அடிப்படை உட்கட்டமைப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு மாநில அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும், மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவைப்படும் திட்டங்களையும் நிறைவேற்ற இடையறாத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, புக்கிட் பத்து பாரிசான் நேஷனல் வேட்பாளர் ஆர். குமரன், 20 ஆண்டுகளாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவத்துடன், மக்களின் குரலை சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்ய உறுதியளித்தார். புக்கிட் பெர்மாய் வேட்பாளர் டத்தோ ஜஃபினி ஷுகோர், கூலாயின் மூன்று தொகுதிகளிலும் பாரிசான் நேஷனலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

இறுதியாக, தேர்தல் பணியாளர்கள் இளைஞர் வாக்காளர்களை நேரில் சந்தித்து அரசின் சாதனைகளையும் எதிர்கால திட்டங்களையும் விளக்க வேண்டும் என்றும், சமூக வலைத்தள விமர்சனங்களுக்கு பதிலளிப்பதை விட மக்களிடையே சென்று நம்பிக்கையை வலுப்படுத்துவதே முக்கியம் என்றும் ஒன் ஹாஃபிஸ் கேட்டுக்கொண்டார்.



















