(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான (JS-SEZ) முதன்மைத் திட்டம் ஏற்கனவே தயாராகிவிட்ட நிலையில், ஜோகூரின் தற்போதைய சிறப்பான பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்வதை உறுதிப்படுத்தும் வகையில், அதை இனியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாஃபிஸ் காஸி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த முதன்மைத் திட்டம் ஆரம்பத்தில் 2025ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் 2026 மார்ச் 30ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், தற்போது மீண்டும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்தத் திட்டத்தை ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தலைவர்களின் சந்திப்பு வரை காத்திருந்து வெளியிட வேண்டிய அவசியமில்லை என்றும், இதற்கு சிங்கப்பூர் அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூர், மலேசியா, ஜோகூர் ஆகியவற்றின் தொடர்புடைய அரசுத் துறைகள் ஏற்கனவே தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கியுள்ளதால், திட்டத்தை உடனடியாக அறிவிக்க முடியும் என்றார்.
இந்த முதன்மைத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு உறுதியை வழங்குவதோடு, பொருளாதாரத் துறைகளின் வளர்ச்சித் திசை, முதலீட்டு மண்டலங்கள், ஊக்கத் திட்டங்கள், அடிப்படை வசதிகள், திறன்மிக்க மனிதவள மேம்பாடு மற்றும் அரசுத் துறைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருப்பதால், இதை தொடர்ந்து தாமதப்படுத்துவது பொருத்தமல்ல என்றும் ஒன் ஹாஃபிஸ் கூறினார்.
ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஜோகூர் மக்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால், முதன்மைத் திட்டத்தை இனியும் தாமதிக்காமல் உடனடியாக வெளியிடுமாறு மத்திய அரசை அவர் வலியுறுத்தினார்.




















