அரசாங்கத்தின் அதிகாரத் துஷ்பிரயோகம்

வாய்ச்சவடாலலால் சிக்கல்

அதிகாரத் துஷ்பிரயோகம் செய்திருப்பதை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தெரிந்தோ தெரியாமலேயோ ஒப்புக்கொண்டிருக்கிறது. சட்டத்துறை அமைச்சர் என்று ஒரு துறையே இல்லை. ஆனால், அதன் பெயரில் ஒருவர் நாடாளுமன்ற மக்களவையில் வாய் தவறி உளறியது தற்போது பெரும் சட்டச் சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டத்தோ தக்கியுடின் ஹசானைக் கடந்த இரண்டு தினங்களாக வறுத்து எடுத்துக்கொண்டிருக்கின்றனர். பிரதமர், துணைப்பிரதமர், மூத்த அமைச்சர்கள் வாயைத் திறக்க முடியாமல் இருக்கின்றனர்.

1974ஆம் ஆண்டில் இருந்து சட்டத்துறை அமைச்சர் பொறுப்புக்கு யாருமே நியமனம் செய்யப்படவில்லை. பிரதமர் இலாகாவில் ஒரு துறையாக மட்டுமே அப்பொறுப்பு உள்ளது. அவ்வகையில் பிரதமர் இலாகா (சட்டம், நாடாளுமன்றத்துறை) அமைச்சராக பாஸ் கட்சியின் தக்கியுடின் உள்ளார்.

நிலைமை இவ்வாறு இருக்கும்போது நாட்டின் அவசரகாலச் சட்டங்களை ரத்துசெய்யும் பெரும் அதிகாரம் அவருக்கு உள்ளதா என்ற எதிர்க்கட்சியினரின் கேள்விக்கணைகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் அவர் இப்போது திணறிக்கொண்டிருக்கிறார்.

மக்களவை ங்பாநாயகர் டத்தோ அஸஹார் அஸிஸான் ஹருன் இவ்விவகாரத்தில் தமது தீர்ப்பைச் சொல்ல முடியாமல் மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு வழக்கறிஞரான அவர், ஆளும் தரப்புக்கு ஆதரவாக ஜனநாயக மரபுக்கு எதிராக அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலத்த குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம், நாடாளுமன்ற அதிகாரம், மாட்சிமை தங்கிய மாமன்னர் ஆகிய தரப்பினரின் அதிகாரத்திற்கே சவால் விடும் வகையில் சபாநாயகர், அமைச்சர் ஆகியோரின் வாதங்களும் முடிவுகளும் இருப்பதாக அனல் பறக்கும் குற்றச்சாட்டுகள் மக்களவையை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன. அமளியும் துமளியும் மக்களவை பாசார் மாலாம் போல் இருக்கிறது.

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்குப் பின்னால் அமர்ந்திருந்த தக்கியுடின் மூன்று முக்கிய தகவல்களை அறிவிக்கப் போவதாகப் பேச்சைதை் தொடங்கினார்.

மூன்றாவது தகவலாக கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் விதி 150(3) இன் அடிப்படையில் நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலப் பிரகடனத்தின்போது இயற்றப்பட்ட அனைத்து அவசரச் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன என்றார்.

அவர் முடித்ததும் அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் டத்தோஸ்ரீ நஜிப் காலத்தில் சட்டத்துறைக்குப் பொறுப்பு ஏற்றிருந்த முன்னாள் அமைச்சர் நான்சி சுக்ரியும் நாம் வெற்றிபெற்று விட்டோம்…நாம் வெற்றி பெற்றுவிட்டோம்  என்று மேசையைைத் தட்டி வெற்றி முழக்கமிட்டனர்.

தக்கியுடின் பெருமையுடன் அவரின் நாற்காலியில் அமர்ந்தார். இவையெல்லாம் ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன.

ஆனால் தம்முடைய இந்த ஒப்புதல் வாக்குமூலம் வழி அரசாங்கத்தின் அதிகாரத் துஷ்பிரயோகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டோம் என்பதை அவர் கொஞ்சமும் உணரவில்லை.

உண்மை நிலையில் – சட்டப்பூர்வமாக… இரண்டு வழிகளில் மட்டுமே அவை ரத்துசெய்யப்பட முடியும். 1). மாமன்னர் அதனை ரத்துசெய்து அதன் அறிவிப்பு அரசு பதிவேட்டில் (கெஸட்) பதிவுசெய்யப்பட வேண்டும். 2). நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உறுப்பினர்களின் வாக்களிப்பின் வழி ரத்துசெய்யப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்திற்கு இவ்விவகாரம் கொண்டுவரப்படாததால் மாட்சிமை தங்கிய மாமன்னர் மட்டுமே அதனை ரத்துசெய்யும் அதிகாரத்தில் இருக்கிறார். ஆனால், இந்த இரண்டு நடைமுறைகளுமே பின்பற்றப்படவில்லை.

சட்டப்பூர்வமாகச் செய்யப்படாததால் அது பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் அதிகாரத் துஷ்பிரயோகத்தை அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது.

நாட்டையும் மக்களையும் பாதிக்கக்கூடிய இந்த அதிமுக்கியமான அவசரகாலச் சட்டங்கள் பாசார் மாலாம் பாணியில் ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here