செர்டாங், ஜூலை 30:
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்து கார்களை திருடி வந்த ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோலாலம்பூரைச் சேர்ந்த காவல்துறையின் புலனாய்வு பிரிவினரால் ஆரம்பத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஜூலை 25 நண்பகல் 2 மணியளவில் டொயோட்டா எஸ்டிமாவுடன் மெர்சிடிஸ் S320 ஐயும் கைப்பற்றியதாக செர்டாங் போலீஸ் துணை கமிஷனர் A.A அன்பழகன் தெரிவித்தார்.
“பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கார்களும் செர்டாங்கில் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“குறித்த சந்தேகநபர்களை விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், பின்தொடர்தல் நடவடிக்கை மூலம் மற்றையவர்களையும் போலீஸ் கைது செய்தது. ஒரு நேபாள நாட்டவர் உட்பட மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்” என்று அவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் பல கைத்தொலைபேசிகள், ஒரு முக்கிய புரோகிராமர், வோக்ஸ்வாகன் பாசாட், ஆடி க்யூ 7 மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட ஆறு வாகனங்களையும் போலீசார் கைப்பற்றியதாக கூறினார்.
“எங்கள் விசாரணையில் அடிப்படையில் சொகுசுமாடிக் குடியிருப்பின் வாகன நிறுத்துமிடங்களுக்குள் நீண்ட காலமாக விடப்பட்ட வாகனங்களை இனங்கண்டு அவற்றை திருடியது தெரியவந்தது,” என்று அவர் கூறினார்.
இந்த வாகனங்கள் நீண்ட காலமாக நாட்டை விட்டு வெளியேறிய வெளிநாட்டினருக்கு சொந்தமானவை என்று அவர்கள் நம்புகிறார்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இருவர் கார்களை வாங்குபவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
“சந்தேக நபர்களில் ஒருவரான 40 வயது நபர், ஒரு சாவி தயாரிக்கும் கடையின் உரிமையாளர் என்றும் அவரே இக்கார்களுக்கு இரண்டாம்
நிலை சாவிகளை தயாரித்துள்ளார் என்றும் தெரியவருகின்றது.
“கைது செய்யப்பட்ட நேபாள நாட்டைச் சேர்ந்தவர் அச்சொகுசுமாடிக் குடியிருப்பின் பாதுகாவலராகப் பணியாற்றினார் என்றும் மற்றும் அவர் பணிபுரிந்த அச்சொகுசுமாடிக்குடியிருப்பில் நீண்ட காலமாக விட்டுச் சென்ற வாகனங்கள் பற்றிய தகவலைக் கொடுத்தார்,” என்றும் அவர் கூறினார்.
இக்குழு இதுவரை ஏழு வழக்குகளுடன் சம்மந்தப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.