ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஒருமுறை உயிருள்ள ஒரு கோழியைப் பிடித்துவந்து அதன் இறகுகளைப் பிய்த்து எறிந்தார். ரத்தம் சொட்டச் சொட்ட அக்கோழி அலறித் துடித்தது. தன் ஆதரவாளர்களுக்கு ஒரு படிப்பினையைத் தருவதற்கு அவர் இதனைச் செய்தாராம்.
அதன்பின்னர் அக்கோழியைக் கொஞ்சம் தூரத்தில் தரையில் விட்டார். உடல் முழுவதும் ரத்தம் வழிய வலியில் அக்கோழி துடித்தது.
சில விநாடிகளுக்குப் பிறகு ஸ்டாலின் அக்கோழியின் முன் கொஞ்சம் கோதுமையைத் தூவிவிட்டார். அதனை வேக வேகமாகக் கொத்திச்சாப்பிட்ட அக்கோழி ஸ்டாலினையே சுற்றிச் சுற்றி வந்தது.
அப்போது, தன் ஆதரவாளர்களை நோக்கிப் பேசிய ஸ்டாலின், மூடர்கள் ஆள்வது எவ்வளவு எளிது என்பதை இக்கோழியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வலியைத் தந்தாலும் அவர்கள் உங்கள் காலடியைச் சுற்றியே வருவார்கள்.
இவ்வப்போது இப்படி எதையாவது வீசிக் கொண்டிருந்தாலே போதும், காலம் எல்லாம் உங்கள் காலடியில் விழுந்து கிடப்பார்கள் என்று ஸ்டாலின் தம் ஆதரவாளர்களுக்கு அரசியல் பாடம் கற்றுத் தந்தார்.
நம் நாட்டிலும் இன்று அதேதான் நடந்துகொண்டிருக்கிறது. செஞ்சோற்றுக் கடனுக்காக அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒரு தரப்பினரும் ஜனநாயகத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மாமன்னரின் உத்தரவையும் ஆலோசனையையும் மீறி செயல்படும் அளவுக்கு பதவி – பண மோகம் இவர்களின் கண்களை மறைத்து விட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாகத் தங்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த மக்களை இவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. புழு – பூச்சிபோல் அவர்களைத் தங்களது காலின் அடியில் போட்டு மிதித்து வருகின்றனர்.
மக்கள் மன்றமான நாடாளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் செல்வதற்கு மத்திய சேமப்படை போலீஸ் (எஃப்ஆர்யூ) கேடயங்களைப் பயன்படுத்தி மனிதச் சங்கிலியாகத் தடுப்பு அரண் எழுப்பப்பட்டது. பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட ஒரு போர்முனை போன்று காட்சி தந்தது.
மலேசியாவில் ஜனநாயகம் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கிறது. ஜனநாயகம் இன்று கேள்விக்குறியாகி இருக்கிறது. ஜனநாயக உரிமைகளில் ஒன்றான பொதுத்தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியாதவாறு இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட்டனர்.
மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மன்னர், மலாய் ஆட்சியாளர்கள், மக்கள், ஜனநாயகம் ஆகியவற்றுக்கு மதிப்பில்லை. மதிக்கத் தெரியாத ஒரு மாண்பை இந்த அரசாங்கம் கொண்டிருக்கிறது.
மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்குள் செல்வதற்கு இரும்புத் திரையைப் போட்டிருக்கும் இந்த அரசாங்கம் வேறு யாரை அனுமதிக்கப் போகிறது?
தேசிய முன்னணி ஆட்சியில் இருந்தபோது அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக், அப்போதைய துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினைக் கட்சியில் இருந்தும் அரசாங்கப் பதவியில் இருந்தும் தூக்கி எறிந்தார்.
இருக்கும் இடந்தெரியாமல் மறக்கப்பட்டார் டான்ஸ்ரீ முஹிடின். அப்போது ஜசெக தலைவர்கள் அவரை ஒருமுறை அல்ல மூன்று முறை நேரில் சந்தித்து அவர் கரம்பற்றி மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்தனர். அப்படிப்பட்டவர் இன்று இப்படி மாறிப் போவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
நாடாளுமன்றம் மூடப்பட்டதற்கு என்ன காரணம்? 11 பேருக்கு கோவிட்-19 தொற்றுக்கிருமி பாதிப்பு இருப்பதால் 2 வாரங்களுக்கு மூடப்படுவதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் விளக்கம் தந்திருக்கிறார்.
ஐடிசிசி மண்டபத்தில் 204 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டன. ஒரே ஒருநாள் மூடப்பட்டது. தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனர். இந்த விவரங்களை அவர்தான் அறிவிக்கிறார். ஆனால் தொழிற்சாலைகள் மூடப்படவில்லையே!
ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இப்படி எல்லாம் நாடகம் போட முடியுமா? மக்கள் – நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. இவர்கள் ஆட்சியில் நீடிக்க வேண்டும். இதற்குத்தான் இந்த நாடகம்.
டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் மீது மிகப் பெரிய மரியாதை இருந்தது. அவரும் இன்று அரசாங்கத்தின் கைப்பாவையாகிவிட்டார். இதுதான் வேதனையின் உச்சம். பதவியும் அதிகாரமும் படுத்தும்பாடு மக்களின் உயிர்களை நாளும் குடித்துக்கொண்டிருக்கிறது. அந்த ஆண்டவன்தான் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
– பி.ஆர். ராஜன்