நாட்டில் இதுவரை 33 குழந்தைகள் கோவிட் -19 காரணமாக அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்

அலோர் ஸ்டார்: பெண்கள், குடும்பம் மற்றும் சமூக நல மேம்பாட்டு அமைச்சகத்தின் பதிவின்படி, நாட்டில் இதுவரை கோவிட் -19 தொற்று நோயினால் 33 குழந்தைகள் தங்கள் பெற்றோரை அல்லது பராமரிப்பாளர்களை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தகவல்களை சுகாரார அமைச்சிடமிருந்து தாம் பெற்றதாகவும் அவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக நல மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா ஹாரூன் தெரிவித்தார்.

“நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு ஏற்ப ஏழு நிறுவனங்களின் மூலம் கோவிட் -19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குத் தேவைப்படும் உதவிகளை செய்வதில் அமைச்சகம் முயற்சி எடுத்துள்ளது,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ரூமா கனாக்-கனாக் (RKK) போகோக் சேனா; தாமான் சின்னார் புத்ரி பத்து காஜா, மலாக்கா; தாமான் சின்னார் புத்ரி சேராஸ்; ரூமா புடாக் லாக்கி மலாக்கா; ரூமா கனாக்-கனாக் மினி கிளந்தான்; தாமான் சின்னார் புத்ரி கோத்தா கினபாலு மற்றும் தாமான் சின்னார் புத்ரி கூச்சிங் ஆகிய நிறுவனங்களுமேயாகும்.

குழந்தைகள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ அங்கு தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

“அவர்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட உறவினர்கள் அல்லது உடன்பிறப்புகள் இருக்கிறார்களா, அவர்களை கவனித்துக்கொள்ள முடியுமா என்று நாங்கள் நிலைமையை மதிப்பீடு செய்வோம்,” என்றும் ரீனா கூறினார்.

அரசுசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அனாதைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள 140 பாதுகாவலர்களுக்கு மாதாந்திர உதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் பெற்றோர்களையோ அல்லது பராமரிப்பாளர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் மன நலனைப் பராமரிப்பதற்காக மலேசிய கவுன்சிலர் வாரியத்தின் மனநலத்துறை மூலம் வழக்கமான ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“நெருங்கிய உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் குழந்தைகளின் ஆதரவையும் உதவியையும் வழங்குவார்கள் என்று நம்புகிறேன், அதனால் அவர்கள் தாம் கைவிடப்பட்டதாக உணர மாட்டார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

“இதுபோன்ற யாருமற்ற (கைவிடப்பட்டவை) குழந்தைகள் அல்லது சிறுவர்கள் இருந்தால், பொதுமக்கள் அல்லது சமூகத் தலைவர்களும் 1599 என்ற துரித எண்ணிற்கு அழைத்து தாலியன் காசிக்கு அறிவிக்குமாறும் அல்லது நாடு முழுவதும் உள்ள எந்தவொரு 108 மாவட்ட சமூக நல அலுவலகக் கிளைகளையும் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுக்கு வேண்டிய உதவி எளிதில் செய்ய முடியும்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here