கொரோனா தொற்றுக்கிருமி

-விலகிப்போக நாமே முன்வரவேண்டும்

கொரோனா தொற்றுக்கிருமி தானாகவே நகர்வது இல்லை – இடம்விட்டு இடம் பாய்வதும் இல்லை. மக்களாகிய நாம்தான் அதனை நகர்த்திச் செல்கிறோம். நகர்வதை நிறுத்தினால் அக்கொடிய தொற்று  செத்துப்போகும்!

இதுதான் நிதர்சனம் – அப்பட்டமான உண்மை! விலகி இருந்தால் வீரியமிக்க கொரோனாவை அழித்துவிடலாம். இன்பம், துன்பம் எல்லாமே இறைவன் கட்டளையே. கஷ்டங்களைக் கொடுத்தவர் அதற்கான தீர்வையும் கொடுப்பார். தன்னம்பிக்கையை ஒருபோதும் சிதற விடாமல் மன வலிமையோடு எதிர்கொள்வோம்.

இந்தச் சிந்தனையானது நாம் சுதந்திரமாக – எதையும் பொருட்படுத்தாமல் விருப்பம்போல் செயல்படலாம் என்று அர்த்தமாகிவிடாது.

தனிமனிதன் ஒவ்வொருவர்தம் கட்டுக்கோப்பும் உயர்நெறி ஒழுக்கமுறைகளும்தான் இக்கொடிய உயிர்க்கொல்லி தொற்றில் இருந்து நம்மையும் காத்து சக மனிதர்களின் உயிரையும் பாதுகாத்திடும்.

இன்று தெருக்களில் இறங்கிப் பாருங்கள் – பேரங்காடிகள், விற்பனை மையங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த நெருக்கடியில் உராய்வுகள் அதிகமாகவே இருக்கின்றன.

அடுத்தது சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையும் நெரிசலும் நமக்குப் பெரும் பீதியைத் தருகின்றன. யார் சொன்னாலும் எவ்வளவுப் பெரிய தண்டனையானாலும் எனக்கு என்ன என்ற அலட்சியம் நாட்டில் கொரோனா பரவல் மூன்றாம் அலையாக வீரியம் பெற்றிருக்கிறது.

நேற்று நண்பகல் வரை நாட்டில் 3,807 கோவிட்-19 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு பதிவு ஙெ்ய்யப்பட்டிருக்கின்றனர். இத்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டிருப்போரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்து 484 பேர். நேற்றைய மரண எண்ணிக்கை 17. மொத்தம் 1,700 பேர் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர்.

மலேசியாவில் கோவிட்-19 எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு புதிய பேரிடருக்குக் கட்டியங் கூறி வருகிறது. நிலைமை கட்டுமீறிப் போய்க் கொண்டிருக்கின்ற நிலையில் மூன்றாவது அலையா, நான்காவது அலையா என்று ஆய்வும் விவாதமும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள சிசியு எனப்படும் தீவிரக் கண்காணிப்புப் பிரிவுகள் முழுமையான ஆக்கிரமிப்பில் உள்ளன. இடமே இல்லை என்ற நெருக்கடிமிக்க நிலை அபாயச் சங்காக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மரண எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கொடிய நோய்கள் இல்லாத இளையோரும் உயிரிழந்து வருகின்றனர். மரணம் மட்டும் நம் பயம் இல்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் பாதிப்பை எதிர்கொள்ளும் பயமும் நம்மைக் கவ்வி வருகிறது.

மருத்துவமனைகளில் கட்டில்கள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. கட்டிலுக்காகப் பல மணி நேரம் வரிசயைில் காத்துக்கிடக்க வேண்டிய துர்பாக்கியம் மலேசியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவதற்கு முன் தனிமைப்படுத்தும் மையமாக மாறியிருக்கும் ஸ்டேடியம் மெலாவத்தியில் பார்க்கும் காட்சி குலைநடுங்க வைக்கிறது.

காட்டுத் தீபோல் பரவும் கொரோனா பரவுதலைத் தடுப்பூசியால் மட்டுமே துடைத்தொழித்திட முடியும் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. மக்கள் கரங்கோக்க வேண்டும். புதிய முயற்சிகளை முன்னெடுத்து கொரோனா தொற்று சங்கிலித் தொடரை நொறுக்கிட வேண்டும்.

மக்கள் மனம் வைத்தால் மட்டுமே கோவிட்-19 மிரட்டலை அடியோடு வேரறுத்து சமாதிகட்ட முடியும். ஒரு தனி மனிதனின் அலட்சியம் பெரும் விபரீதம் என்பதை இமைப்பொழுதிலும் மறந்துவிடலாகாது.

கோவிட்-19 பரவல் தடுப்பில் நிறைய பலவீனங்கள் உள்ளன என்பதை அரசாங்கம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here