கோலாலம்பூர்: கோம்பாக், தாமான் கிரீன்வூட்டில், தனியாக காரை ஓட்டிச் சென்ற பெண்ணின் தொடையில் கத்தியால் குத்திய, திருடன் ஒருவன் அவரின் கைப்பையை பறித்துச் சென்றான்.
இந்த சம்பவம் குறித்து சனிக்கிழமை (ஆகஸ்டு 14) மாலை 4.24 மணிக்கு பொதுமக்களிடம் இருந்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கோம்பாக் மாவட்ட துணை கமிஷனர் ஜெய்னல் முகமட் முகமட் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 15) அவர் வெளியிட்ட அறிக்கையில், “அந்தப் பெண்ணின் வலது தொடையில் திருடன் குத்தியதால் காயம் ஏற்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணையில், அந்த பெண் தனியாக தனது சகோதரரின் காரை ஓட்டி வந்ததாக தெரியவந்தது.
“அப்பெண் காரில் இருந்தபோது அவரது கைப்பையை பறிக்க முயன்ற ஒரு ஆடவர் அப்பெண்ணை கத்தியால் குத்தி, கைப்பையை பறித்துகொண்டு தப்பி ஓடியதாக” அவர் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட அப்பெண் காயமடைந்ததாலும் அதிர்ச்சியடைந்ததாலும் அவரால் சந்தேகநபர் மற்றும் சம்பவம் குறித்த சரியான விளக்கத்தை அளிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
“பாதிக்கப் பட்ட பெண் சிகிச்சைக்காக செலாயாங். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
“கொள்ளையின் போது காயம் ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 394 இன் கீழ் நாங்கள் விசாரணைகளைத் தொடங்கினோம்,” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, இந்த சம்பவத்தை நேரில் பார்த்த யாராவது போலீஸ் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் இன்ஸ்பெக்டர் நூர் அஸ்ருல் அமிருல் முஸ்தபாவை 03-6126 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது சிலாங்கூர் போலீஸ் துரித எண்ணான 03-2052 9999 ல் தொடர்பு கொள்ளலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.





















