ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தொலைக்காட்சி, கணினி அல்லது தொலைபேசி பார்ப்பவரா நீங்கள்? பக்கவாதம் வருவதற்கு ஏழு மடங்கு வாய்ப்புள்ளது என்கின்றது ஆய்வு!

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள், மொபைல் அல்லது கணினியைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு ஏழு மடங்கு அதிகம் என்கிறது கனேடிய ஆய்வு ஒன்று.

கால்கரி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஆய்வாளர்கள் 143,000 வயது வந்த கனேடியர்களை சராசரியாக 9.4 ஆண்டுகள் கண்காணித்துள்ளார்கள்.

இந்த ஆய்வை மேற்கொண்ட காலகட்டத்தில், 2,965 பேருக்கு பக்கவாதம் தாக்கியதை ஆய்வாளர்கள் கண்டுள்ளனர். அதிக நேரம் அமர்ந்தபடியே இருந்து, உடற்பயிற்சி குறைவாக செய்பவர்களே இவர்களில் அதிகம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

முந்தைய ஆய்வுகள், அமர்ந்தவண்ணமே நேரத்தை செலவிடும் வயது வந்தவர்கள் பக்க வாதம் உட்பட இதய பிரச்சினைகளால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக காட்டியுள்ள நிலையில், பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களில் பத்தில் ஒன்பது பேர் அதிக நேரம் உட்கார்ந்த வண்ணமே செலவிடுபவர்கள் என தெரியவந்துள்ளது.

உட்கார்ந்த வண்ணம் நீண்ட நேரம் படிப்பது, அதிக நேரம் கணினியில் நேரம் செலவிடுவது ஆகியவையும் பிரச்சினைக்கு காரணமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஒரு இடத்திலேயே உட்காராமல் ஓடியாடி வேலை செய்தல், உடற்பயிற்சி செய்தல் ஆகியவை உடல் நலனுக்கு நன்மை பயக்கும் என்று கூறும் ஆய்வாளர்கள், அப்படி செய்வதுடன் ஆரோக்கியமான அன்றாட நடைமுறைகளைப் பின்பற்றினால் இதய பிரச்சினைகள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கலாம் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here