பெட்டாலிங் ஜெயா: நாட்டில் நேற்றைய (ஆகஸ்டு 24) நிலவரப்படி 79.6 விழுக்காட்டினர் அல்லது 18,631,593 தனிநபர்கள் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர் என்று கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் மற்றும் அணிகள் உத்தரவாத சிறப்புக்குழு (JKJAV) தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் தெரிவித்தது.
மேலும் நாட்டு மக்களில் மொத்தம் 58 விழுக்காட்டினர் அல்லது 13,580,934 பேர் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
நேற்று மொத்தம் 420,164 அளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது என்றும் அதில் முதல் டோஸ் 155,004 பேருக்கும் இரண்டாவது டோஸ் 265,160 பேருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் (PICK) மூலம் நிர்வகிக்கப்படும் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கையில் 32,212,527 தடுப்பூசியின் அளவுகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மாநில அடிப்படையில் தடுப்பூசியின் அளவுகளை நோக்கும் போது, லாபுவானில் 92.6 விழுக்காட்டினர் அல்லது 63,416 தனிநபர்கள் இரண்டு டோஸ்களை செலுத்தியுள்ளனர். இம்மாநிலமே அதிக தடுப்பூசி விகிதத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது.
இதைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் 86 விழுக்காட்டினரும் (5,301,004), சரவாக்கில் 85.7 விழுக்காட்டினரும் (1,750,717), நெகிரி செம்பிலானில் 73.4 விழுக்காட்டினரும் (597,832) தங்களது தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
அத்தோடு குறைந்தளவு தடுப்பூசி செலுத்திய விகிதங்களைக் கொண்ட மாநிலங்களாக சபாவில் 32.5 விழுக்காடினரும் (897,704) மற்றும் கிளந்தானில் 39.2 விழுக்காட்டினரும் (484,845) பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
























