விநாயகர் சதுர்த்தி பூஜையில் அவசியம் இடம் பெறவேண்டியவை

உலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்துக்கும் “ஓம்’ என்ற பிரணவ மந்திரமே காரணமாகும். அப்பேர்பட்ட பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்பவர் விநாயகப்பெருமான்.

முழுமுதற் கடவுளான அவரை எண்ணிச் செய்யப்படும் எந்த செயலும் உலக நன்மையையும், ஆன்மீக பலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது. இந்த மகாகணபதியை மூலப்பரம் பொருளாகவே பாவித்து வழிபடுவது என்பது வேதகாலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் மரபு.

பக்தி நெறியில் பிள்ளையாரின் அருளைப்பெற்ற மகான்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. “அற்புதம் நின்ற கற்பகக் களிறே’ என்று பாடிய ஒளவையைத் தன் துதிக்கையால் கைலாயத்தில் சேர்த்தார். திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி, விநாயகரின் அருளால் தேவாரங்களை மீட்டெடுத்தார். வேதங்களை வகைப்படுத்தி அருளிய வியாஸர் மஹாபாரதத்தை தான் சொல்லச் சொல்ல அதனை தனது தந்தத்தை உடைத்து எழுதியதும் விநாயகப்பெருமானே.

சதுர்த்தி திதி கணேசருக்கு மிகவும் உகந்த நன்னாள். ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று “விநாயக சதுர்த்தி’ பூஜை கொண்டாடப்படுகிறது. (இவ்வாண்டு செப்-10 வெள்ளிக்கிழமை).

பூஜை வழிபாடுகளில் மிக எளிமையானது விநாயகர் வழிபாடாகும். பொதுவாக எந்த நல்ல காரியங்களை ஆரம்பிப்பதென்றாலும் அவை தடைகள் இன்றி நடைபெறுவதற்கு மஞ்சளினால் செய்த பிள்ளையாரை பூஜை செய்து வழிபாட்டுடன் துவக்குவது வழக்கம்.

விநாயகர் பூஜையில் அவசியம் இடம் பெறவேண்டியவை:

அணிவிப்பதற்கு: எருக்கம் பூக்களால் ஆன மாலை,

அர்ச்சிப்பதற்கு: அருகம் புற்கள்,

நிவேதனத்திற்கு: மோதகம் என்று சொல்லப்படும் அரிசிமாவினால் ஆன கொழுக்கட்டை,

வழிபாட்டில் பின்பற்ற வேண்டியவை: நெற்றிப்பொட்டில் கைகளால் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போடுதலும் நன்று.

வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுளான விநாயகப் பெருமானை எந்நாளிலும் வழிபடுவோம். நம்பிக்கையுடன் அந்த தும்பிக்கையானை வழிபட்டால் கற்பகத் தருவாக இருந்து வாழ்வில் நாம் நலம் பெற வேண்டியவைகள் அனைத்தையும் அருளுவார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here