30 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 50 காண்டாமிருக கொம்புகளை கடத்திய 2 ஆடவர்கள் கைது; வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை தகவல்

புத்ராஜெயா: வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை (Perhilitan) வனவிலங்கு கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை கைது செய்தது, மேலும் KLIA செப்பாங் மசூதி சுற்றுவட்டப்பாதையில் ஒரு லோரியை ஆய்வு செய்த பின்னர் 30 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 50 காண்டாமிருகங்களின் கொம்புகளை கைப்பற்றியது.

வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காஜானா மத்திய மண்டல ஒருங்கிணைந்த செயல்பாட்டில் காண்டாமிருகக் கொம்புகளை கடத்தியது தொடர்பான ஆவணங்களையும் லோரியையும் பறிமுதல் செய்தனர்.

“வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையின் பதிவின் அடிப்படையில், காண்டாமிருகக் கொம்புகளைக் கைப்பற்றியதில் கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த முறையே மிகப்பெரியது” என்று அறிக்கையில் தெரிவித்தது.

கைப்பற்றப்பட்ட 50 காண்டாமிருகங்களின் கொம்புகளை ஆராய்ச்சி செய்வதன் மூலமாக ( DNA) அவை உள்ளூர் அல்லது வெளிநாட்டு காண்டாமிருக இனங்களுடயதா என்ற அவற்றின் அசல் மூலம் பகுப்பாய்வு செய்யப்படும் என்றும் அத்துறை தெரிவித்துள்ளது.

“இதுவரை, இக் காண்டாமிருகக் கொம்பு வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது” என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்டாமிருக இனங்கள் மற்றும் பாகங்கள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 2010 [சட்டம் 716] ன் கீழ் “பாதுகாக்கப்படுகிறது” மற்றும் “முழுமையாக பாதுகாக்கப்படுகிறது” என்று அத்துறை குறிப்பிட்டுள்ளது.

இது ஆபத்தில் உள்ள இனங்கள் அனைத்துலக சட்டம் [சட்டம் 686] இன் பின் இணைப்பு I இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது மேலும் இத்தகைய இனங்கள் இறக்குமதி செய்யவோ அல்லது வணிக நோக்கங்களுக்காக ஏற்றுமதி செய்யவோ கூடாது.

கைது இந்த இரண்டு நபர்களும் சட்டம் 716 இன் பிரிவு 68 இன் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என்றும் இது முழுமையாக பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை வைத்திருப்பது, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 100,000 வெள்ளிக்கு மிகாமல் அபராதம் அல்லது மூன்று வருடங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்க வழிகோலுகின்றது என்றும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை தெரிவித்துள்ளது.

இத்துறையின் கூற்றுப்படி, கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 96 காண்டாமிருகக் கொம்புகள் சம்பந்தப்பட்ட கடத்தல் தொடர்பான ஐந்து வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here