பேரரசரை மூன்றாவது முறையாக அவமதித்த குற்றச்சாட்டில் ஆடவருக்கு ஒரு வருட சிறை மற்றும் 20,000 வெள்ளி அபராதம்

கோலாலம்பூர்: கடந்த இரண்டு வருடங்களாக சமூக ஊடகங்களில் மாட்சிமை தங்கிய பேரரசரை அவமதித்ததற்காக இரண்டு முறை சிறைவாசம் அனுபவித்த ஒரு தோட்டக்காரருக்கு, மூன்றாவது தடவையாகவும் பேரரசரை அவமதித்த குற்றச்சாட்டில் இன்று ஒரு வருட சிறை மற்றும் 20,000 வெள்ளி அபராதம் விதித்தது நீதிமன்றம்.

38 வயதான ஷரில் முகமட் சரீஃப் என்ற ஆடவருக்கு எதிரான குற்றச்சாட்டு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.எம். எட்வின் பரம்ஜோதி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீண்டும் அதே குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக நிரூபணமானதால் அவருக்கு மற்றொரு 1,000 வெள்ளி அபராதம் விதித்தார்.

ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 7.43 மணிக்கு “ஷரில் பின் முகமட் சரீஃப்” என்ற பெயரில் உள்ள டுவிட்டர் கணக்கில், மற்றவர்களை எரிச்சலூட்டும் நோக்கத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர் இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அதே நாளில் நண்பகல் 1.30 மணியளவில் புக்கிட் அமானில் உள்ள வணிக குற்ற விசாரணை பிரிவின் சைபர் கிரைம் மற்றும் மல்டிமீடியா விசாரணை பிரிவு அலுவலகத்தால் இந்த பதிவுகள் படிக்கப்பட்டன.

தன் முழு விபரத்தை அந்தக்கணக்கில் குறிப்பிடப்படாத ஷரில், நெட்வொர்க் வசதிகளை தவறாகப் பயன்படுத்தினார். இது தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 (1) (a) இன் கீழ் குற்றமாகும்.

இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 50,000 வெள்ளி வரை அபராதம் அல்லது அதிகபட்சம் ஒரு வருட சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும் பிரிவு 233 (3) அடுத்தடுத்த குற்றங்களுக்கு மேலும் 1,000 வெள்ளி அபராதம் விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

தனது வாதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு ஆதரவாக மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அவரது மனைவி மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதாகவும் கூறினார்.

துணை அரசு வழக்கறிஞர் நஜிஹா ஃபர்ஹானா சே அவாங் இதேபோன்ற குற்றங்களுக்காக குற்றவாளி ஏற்கனவே இரண்டு முறை குற்றவாளியாக இருப்பதால், அவருக்கு சிறைத் தண்டனையை வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு, மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும் ராஜா பெர்மைசுரி அகோங்கை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் அவமதித்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளியை இரண்டு குற்றங்களுக்காகவும் தனித்தனியாக 10 மாத சிறை தண்டனை அனுபவித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரே நேரத்தில் இரண்டு சிறைத் தண்டனையும் நிறைவேற்ற நீதிபதி பரம்ஜோதி உத்தரவிட்டார்.

இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில், எட்டாவது பிரதமர் முஹிடின் யாசின் அவர்களின் பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பின் போது இந்த கருத்துக்கள் கூறப்பட்டன.

மேலும் மார்ச் 13, 2019 அன்று காலை 11.30 மணிக்கு “ஷாஹிரில் சங்கிலி” என்ற சுயவிவரத்தைப் பயன்படுத்தி பேஸ்புக்கில் ராஜாவை அவமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஷரீலுக்கு முதலில் இரண்டு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here