அனைத்துலக புத்தாக்க கண்டுபிடிப்புக்கான போட்டி

பந்திங், செப். 24-

அனைத்துலக அளவில் புத்தாக்க கண்டுபிடிப்புக்கான போட்டி ஒன்றை மலேசிய புத்தாக்கம், கண்டுபிடிப்பு, படைப்பாற்றல் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கிறது.

உலகளவில் உள்ள இளம் ஆய்வாளர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை உலக அரங்கில் காட்சிப்படுத்தும் வகையில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக MIICA  எனப்படும் இவ்வியக்கத்தின் தலைவர் கணேசன் ஜெயபாலன் தெரிவித்தார்.

இயங்கலை வாயிலாக நடைபெறும் இக்கண்காட்சி உலகம் முழுவதும் உள்ள அறிவியல் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்றும் இப்போட்டி எதிர்வரும் நவம்பர் 20 முதல் 21 வரை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2021ஆம் ஆண்டிற்கான இந்த அனைத்துலக புத்தாக்க, கண்டுபிடிப்பு போட்டியில் பாலர் வகுப்பு,ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவன கல்விக் கூடங்களில் பயிலும் 6 வயது முதல் 25 வயதிற்கும் உட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் இதில் ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் பிரிவும் இடம் பெற்றுள்ளது.

இப்போட்டி சுற்றுச்சூழல் அறிவியல், வாழ்க்கை அறிவியல், சமூக அறிவியல், கணிதம் இயற்பியல் மற்றும் பொறியியல் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போட்டியின் பங்கேற்பாளர்களுக்கும், வெற்றியாளர்களுக்கும் சிறந்த பரிசுகளும் விருதுகளும் வழங்கப்படவிருக்கிறது. மேலும் சிறந்த மூன்று அணிகளுக்கு பிளாட்டினம் விருதுகளும், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் உட்பட மின்னியல் சான்றிதழ்கள், தேசிய, அனைத்துலக சிறந்த புத்தாக்கத்திற்கான விருதுகள், அதிக அளவில் பங்கெடுக்கும் நாடுகளுக்கான சிறப்பு பரிசுகள், சிறந்த படைப்புகளை வணிகமயமாக்குதல் என பல சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

இதைத் தவிர சிறந்த பத்து குழுக்களுக்கு (MIICA)  -இன் சிறப்பு பரிசாக 2022 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அனைத்துலக மாணவர் தலைமைத்துவ மாநாட்டில் பங்கு கொள்வதற்கான இலவச நுழைவு சீட்டுகளும் வழங்கப்படவுள்ளது.

உலகின் இளம் ஆய்வாளர்களை அடையாளம் கண்டுபிடிப்பது மட்டுமன்றி அவர்களை மேலும் புதுப் புது கண்டுபிடிப்புகளில் பங்குகொள்ள  ஊக்குவிப்பதே இவ்வியக்கத்தின் தனித்தன்மை நோக்கமாகும். அதோடு இந்த நோக்கம் மனிதகுலத்தின் மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சி நமது சமுதாயத்திற்கு ஒரு முக்கியமான செய்தியாக மட்டுமல்லாமல் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு செய்யப்படும் ஒரு சேவையாக இருக்கும் என்றும் இதன் அடிப்படையிலேயே MIICA இயக்கம் இதனை முன்னின்று நடத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சி வெற்றி பெற அனைத்து ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகள் கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறு கணேசன் ஜெயபாலன் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வு குறித்த மேல் விவரங்களுக்கு MIICA  குழுவை 012-6774990 என்ற திறன்பேசி வாயிலாகவோ அல்லது miicamalaysiagmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here