கோலாலம்பூர்:
ஷா ஆலமில் உள்ள புக்கிட் செந்தோசா பகுதியில் நடந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, 18 முதல் 49 வயதுக்குட்பட்ட 6 உள்ளூர் ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த மோதல் பிப்ரவரி 23 அன்று மாலை சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக போலீசாருக்கு இரண்டு புகார்கள் கிடைத்தன.
முதற்கட்ட விசாரணையில், இந்த மோதல் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒரு தவறான புரிதல் மற்றும் அதிருப்தி காரணமாக உருவானது என்று தெரியவந்துள்ளது என்று, சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் (Datuk Shazeli Kahar) கூறினார்.
இந்தச் சம்பவம் தனிப்பட்ட தகராறு தொடர்பானது என்றும், இதில் குண்டர் கும்பல் சம்மந்தப்பட்ட (Gangsterism) அல்லது இனவாத கூறுகள் ஏதும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் 148-வது பிரிவின் கீழ் (கலவரத்தில் ஈடுபடுதல்) விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.


















