கூச்சிங்: சரவாக்கில் இன்று முதல் அனைத்து தகுதியுள்ள பெறுநர்களுக்கும் கோவிட் -19 பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி ஆரம்பமாகியுள்ளது.
சரவாக் துணை சுகாதார இயக்குநர் (பொது சுகாதாரம்) டாக்டர் ரோஸ்மாவதி அரிஃபின் இது பற்றி கூறும்போது, தற்போது நோய் அல்லது மருத்துவ சிகிச்சையின் விளைவாக பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு, பூஸ்டர் டோஸ் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார். அந்த வகையில் 11,900 பேர் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
“அவர்களை தவிர, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 80,300 பேர் மற்றும் 30,340 மருத்துவ அலுவலர்கள் மற்றும் முன்னணி வீரர்கள் ஆகியோருக்கும் இந்த பூஸ்டர் டோஸ் வழங்கப்படும்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
கோவிட் -19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் டோஸின் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சுகாதார மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் கிளினிக்குகளில் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் கிளினிக்குகளின் பட்டியல் வெளியிடப்படும், தகுதியுள்ள பெறுநர்கள் முன்பதிவு செய்ய கிளினிக்கைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படும் என்றார்.
மூன்றாவது டோஸ் வழங்குவதனால், முன்பு போடப்பட்ட தடுப்பூசி தேவையான பாதுகாப்பு அளிக்காது என்று அர்த்தமல்ல, மாறாக, இந்த முயற்சி நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்று அவர் கூறினார்.
“கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராட நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதற்கு இரண்டு டோஸ் மட்டும் போதாது என்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தில் பிரச்சினைகள் உள்ளவர்கள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு மூன்றாவது டோஸ் தேவை,” என்று அவர் விளக்கினார்.
“இதற்கிடையில், கூடுதல் டோஸ் முதன்மை தடுப்பூசி தொடருக்கு போதுமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்ட ஒரு நபருக்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது, (தடுப்பூசி செயல்திறன் குறைந்து வருகிறது).”
மூன்றாவது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ், குறிப்பாக உயர் -ஆபத்தில் உள்ள குழுக்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அத்தோடு இந்த கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடியிலிருந்து முடிவுக் கட்டத்திற்கு கொண்டு வர உதவும் என்று நம்புகிறேன் என்றும் டாக்டர் ரோஸ்மாவதி கூறினார்.
சரவாக் தடுப்பூசி திட்டத்தை முடிக்க முன்னோடியாக இருந்ததால், பூஸ்டர் டோஸ் திட்டத்தை தொடங்கும் முதல் மாநிலமாக அது தேர்வு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் முன்னர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.