கோலாலம்பூர் : நெகிரி செம்பிலான், செண்டாயன், 2, தாமான் நுசரி பாயுவில் நேற்று நண்பகல் வேனில் விடப்பட்டதாக நம்பப்படும் ஒரு ஊனமுற்ற சிறுமி (OKU) 3 மணி நேரம் பூட்டிய வேனினுள் இருந்ததால் இறந்ததாக நம்பப்படுகின்றது.
எட்டு வயதான பாதிக்கப்பட்ட சிறுமி தாமான் நுசரி அமானில் உள்ள ஒரு பகல்நேர பராமரிப்பு மையத்திற்கு செல்ல வேனில் ஏறினார், ஆனால் குழந்தை வேனில் இருந்ததை உணராமல் வேன் ஓட்டுநர் வீடு திரும்பியுள்ளார்.
பிற்பகல் 2.30 மணிவரை பாதிக்கப்பட்ட சிறுமி வேனில் இருந்ததை 34 வயதான வேன் ஓட்டுநர் அறிந்திருக்கவில்லை என நம்பப்படுகிறது என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் சையத் இப்ராஹிம் கூறினார்.
மூன்று மணி நேரம் கழித்து, மயக்கமடைந்த நிலையிலிருந்த அந்த சிறுமி, சிரம்பானின் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
“எனினும், அந்த சிறுமி இறந்துவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
அதைத் தொடர்ந்து, சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காணவும் மேலதிக விசாரணைக்காகவும் வேனின் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், வேனின் ஓட்டுநர் விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்றும், குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31 (1) (a) ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் கூறினார்.
அத்தோடு, பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததன் காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக, அவரது சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.























