ஒருவரின் மரணத்துக்குப் பிறகு, கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட சேவைகளில் அவர் சேமித்து வைத்திருக்கும் தரவுகள் என்ன ஆகும் என்று யோசித்திருக்கிறீர்களா?

ஒருவரின் மரணத்துக்குப் பிறகு, கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட சேவைகளில் அவர் சேமித்து வைத்திருக்கும் தரவுகள் என்ன ஆகும் என்று யோசித்திருக்கிறீர்களா? கூகுள் தளம் இதற்காக ஒரு வசதியைச் செய்துள்ளது. கூகுளின் சேவைகளான மேப்ஸ், ஜிமெயில், தேடல், புகைப்படங்கள் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்தும் நபர் என்றால், அல்லது உங்களிடம் ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்குமென்றால் கூகுளிடம் உங்களைப் பற்றிய எக்கச்சக்கமான தரவுகள் இருக்கும்.

சிலர் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளில் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களையும் கூட சேமித்து வைத்துள்ளனர். இதுபோன்ற முக்கியமான தகவல்கள் எல்லாம் நமக்குப் பிறகு யார் கைக்குச் சென்று சேர வேண்டும் என்று நாம் திட்டமிடலாம்.

நீண்ட நாட்கள் ஒரு கணக்கில் எந்த விதமான செயல்பாடும் இல்லை, ஒருவர் மாதக்கணக்கில் தனது கூகுள் கணக்கைப் பயன்படுத்தவில்லை என்று கூகுள் கண்டறிந்தால் அந்தக் கணக்கு முடக்கப்படும். ஆனால், எப்போது உங்கள் கணக்கில் செயல்பாடு இல்லை, அப்படிச் செயல்பாடு நின்ற பிறகு உங்கள் தரவுகளை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நீங்களே முடிவு செய்யும் வசதியை கூகுள் வழங்குகிறது.

நம்பிக்கைக்குரிய ஒருவருடன் நாம் நமது கணக்கு மற்றும் இதர தரவுகளைப் பகிரலாம். அல்லது செயல்பாடு நீண்ட நாட்களுக்கு இல்லையென்றால், தானாக அத்தனை தரவுகளும் அழிந்து விடுமாறும் நாம் தேர்வு செய்யலாம். இந்த இரண்டு தேர்வுகளில் ஏதோ ஒன்றை நாமே திட்டமிடலாம். இதற்காக கூகுள் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்றும் நாமே நிர்ணயிக்கலாம்.

அதிகபட்சம் 18 மாதங்கள் வரை கூகுள் காத்திருக்குமாறு நாம் திட்டமிடமுடியும். myaccount.google.com/inactive என்கிற இணைப்பில் இதைச் செய்யலாம். ஆனால் நமது பாஸ்வேர்ட் உள்ளிட்ட விவரங்களை நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பகிர்ந்து வைத்திருப்பதே சிறந்தது என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

மேற்குறிப்பிட்டுள்ள இணைப்பில், செயல்பாடு இல்லை என்று முடிவு செய்ய எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்கிற விவரத்தை நாம் உள்ளிட வேண்டும். பின் மின்னஞ்சல், மொபைல் எண் உள்ளிட்ட இதர விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதன் பிறகு, நமது கணக்கு செயல்பாட்டில் இல்லை என்பதை கூகுள் கண்டறிந்த பிறகு அதை யாருக்கெல்லாம் தெரிவிக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்யலாம். அதிகபட்சம் 10 பேர் வரை இந்த எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும். மேலும் நமது எந்தெந்தத் தரவுகளை நம்பிக்கைக்குரிய நபர் பார்க்கலாம், பதிவிறக்கம் செய்யலாம் என்பதையும் நாம் முடிவு செய்யலாம். இதற்கு நாம் அந்த இன்னொரு நபரின் மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட வேண்டும்.

யாரும் நமது கூகுள் தரவுகளைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தால் யாருடைய மின்னஞ்சல் முகவரியையும் உள்ளிட வேண்டாம். ஆனால், இப்படிச் செய்தால், செயல்பாடு நின்ற பிறகு கூகுள் தானாக உங்கள் தரவுகளை அழித்துவிடும். யாராலும் அதை மீட்க முடியாது.

நமது நம்பிக்கைக்குரிய நபரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடும் பட்சத்தில், அவரிடம் எந்தெந்தத் தரவுகளையெல்லாம் பகிர வேண்டும் என்று நாம் தேர்வு செய்யலாம். புகைப்படங்கள், சாட், சென்று வந்த இடங்களின் விவரங்கள் எனப் பல தரவுகள் இதில் அடக்கம்.

இப்படி நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு நமது கணக்கின் தரவுகள் கிடைக்குமென்றாலும், அது வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே உயிர்ப்போடு இருக்கும். நாம் இந்தத் தேர்வைச் செய்யும்போது, நம்பிக்கைக்குரிய நபருக்கென நாம் எழுதி வைத்திருக்கும் செய்தி இ-மெயில் வடிவில் அவருக்குச் சென்று சேரும்.

கணக்கில் செயல்பாடு இல்லாத நிலையில், இந்த விவரங்களை உங்களிடம் பகிர வேண்டும் என்று குறிப்பிட்ட நபர் தேர்வு செய்துள்ளார் என்றும் அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு வேளை நாம் அத்தனை தரவுகளையும் அழிக்க வேண்டும் என்று தேர்வு செய்திருந்தால், செயல்பாடு நின்ற பிறகு, நாம் தேர்ந்தெடுத்த கால அளவுக்குப் பின், யூடியூப் வீடியோக்கள், தேடல் விவரங்கள், கூகுள் பே விவரங்கள் உள்ளிட்ட அத்தனையும் அழிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here