கோவிட்-19 ஆல் இறந்தவர்களின் சடலங்களை நிர்வகிக்க 8 மில்லியனுக்கு மேல் பணம் செலவு – சுகாதார அமைச்சு தகவல்

கோலாலம்பூர், அக்டோபர் (21) :

கடந்த 2020 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி வரை சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளின் தடயவியல் துறையில் கோவிட் -19 தொடர்பான சடலங்களை நிர்வகிக்க மொத்தம் 8.128 மில்லியன் வெள்ளியை சுகாதார அமைச்சகம் செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக இந்தப் பணம் செலவிடப்பட்டதாக கூறியுள்ளது.

துணை சுகாதார அமைச்சர் II டத்தோ ஆரோன் அகோ தகாங் இதுபற்றிக் கூறுகையில், மொத்தத்தில், 6.5 மில்லியன் வெள்ளி கோவிட் -19 காரணமாக மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை சேமிப்பதற்காக செலவிடப்பட்டது என்றார்.

“2020 ஆம் ஆண்டில் நாங்கள் 898,000 வெள்ளியும் இந்த ஆண்டு 7.2 மில்லியன் வெள்ளியையும் செலவிட்டிருக்கின்றோம்” என்று இன்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

மேலும் சுகாதார ஊழியர்களுக்கான சிறப்பு உதவித்தொகை மற்றும் கோவிட் -19 காரணமாக இறந்தவர்களின் சடலங்களை மருத்துவமனையில் பாதுகாப்பதற்கு செலவிடப்பட்ட தொகை குறித்து செனட்டர் டத்தோ ஜுஹானிஸ் அப்துல் அஜீஸின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்கும் அதாவது நிர்வகிக்கும் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்கு கோவிட் -19 சிறப்பு கொடுப்பனவுகளை வழங்கும் விகிதம் மாதத்திற்கு 400 வெள்ளியிலிருந்து 600 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று முன்னதாக ஆரோன் தெரிவித்தார்.

மேலும் சுகாதார அமைச்சகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை, சுமார் 1.7 மில்லியன் வெள்ளி கோரிக்கைகளை உள்ளடக்கிய MOH ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்குவிப்புத் தொகைகளை வழங்க மொத்தமாக 916 மில்லியன் வெள்ளி செலவழித்துள்ளது என்றார்.

“இந்த சிறப்பு கொடுப்பனவு தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தில் (PICK) ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது, இதன் விகிதம் மாதத்திற்கு 600 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here