கோலாலம்பூர், நவம்பர் 11 :
காஜாங்கிற்கு அருகில் உள்ள செராஸ் செலாத்தானின் வணிக வளாகம் ஒன்றின் அருகே நேற்று இரவு விருந்து நடந்த இடத்தில் இருந்த இராட்டினத்திலிருந்து விழுந்து ஆடவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
பாதிக்கப்பட்ட 39 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காஜாங் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
காஜாங் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் கண்காணிப்பாளர் முஹமட் நசீர் ரஹ்மான் இச்சம்பவம்பற்றிக் கூறுகையில், நேற்று நள்ளிரவு 12.05 மணியளவில், விருந்து நடந்த இடத்திலிருந்து ஓர் ஆண் ஊழியரிடமிருந்து சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில் இந்தச் சம்பவத்தில் எந்தக் குற்றச் செயலும் நடைபெற்றிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவுமில்லை என்று அவர் கூறினார்.
“இந்த விபத்து விருந்து உரிமையாளரின் அலட்சியத்தினால் நடந்ததா அல்லது பாதிக்கப்பட்டவரின் அலட்சியத்தால் நடந்ததா என்பதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய நாங்கள் இன்னும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
“பாதிக்கப்பட்டவரின் உடல் யுனிவர்சிட்டி கெபாங்சான் மலேசியா மருத்துவமனையின் (HUKM) தடயவியல் பிரிவுக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
“சம்பவத்தில் காயமடைந்த இன்னுமொரு பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுவரை, இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“இது சம்பந்தமான தகவல் தெரிந்தவர்கள் வழக்கு விசாரணை அதிகாரியான சார்ஜென்ட் முஹமட் இம்ரான் முஹமட் நூரை 013-7638512 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது விசாரணையில் உதவுவதற்கு அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.




















