கூலாய் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆலயங்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்குவேன் – தியோ உறுதி

கடந்தாண்டு கூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் 18 ஆலயங்களுக்கும் இந்திய அரசு சாரா இயக்கங்களுக்கும் மொத்தம் 97,000 ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டது.

முழுமையான ஆவணங்கள், விண்ணப்பங்கள் தொகுதி மக்கள் சேவை மைய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், அவை அங்கிகரிக்கப்பட்டதாக தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

“இத்தொகுதியில் உள்ள பதிவு பெற்ற ஆலயங்கள் முறையான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பங்களைக் கூலாய் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம்.” என்று அவர் சொன்னார்.

முன்னதாக ஜோகூர், கூலாயில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்திர உற்சவத்தில் கலந்து சிறப்பித்து, நன்கொடையாக 5,000 ரிங்கிட் வழங்கினார்.

“வழங்கப்பட்ட இந்த உதவி நிதி, ஆலய வருடாந்திர திருவிழா சிறப்பாக நடைபெற உதவும் என நம்புகிறேன்” என்று தொடர்புத் துறை துணை அமைச்சருமான தியோ குறிப்பிட்டார்.

2023 -இல் இக்கோவிலுக்கு வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சின் ஒதுக்கீட்டில் 96,000 ரிங்கிட் மானியம் கிடைத்துள்ளதையும் தியோ சுட்டிக் காட்டினார்.

கூலாய் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு சிறந்த சேவையை தொடர்ந்து வழங்குவேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.

“கூலாய் நாடாளுமன்ற தொகுதி மக்களின் நல்லிண்ணக்கமும், ஒற்றுமையும் தொடர்ந்து காக்கப்படும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மதத்தினருக்குமான நிதி ஒதுக்கீடு அரசியல் பின்னணி பார்க்காமல் வழங்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கடந்த மாதம், கூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் வருடாந்திர உற்சவத்தை ஏற்பாடு செய்த லாடாங் கேளன் ஸ்ரீ மஹா மாரியம்மன் அம்மன் ஆலயம், லாடாங் செடனாக் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், செங்காங் ஸ்ரீ மாரியம்மன் அம்மன் ஆலயம் என மூன்று கோவில்களின் திருவிழாக்களில் கலந்து சிறப்பித்ததோடு, மொத்தம் 13,000 ரிங்கிட்டை மானியமாக தியோ வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here