கோலாலம்பூர், நவம்பர் 12 :
இன்று மாலை 7 மணிக்கு நடைபெற உள்ள APEC பொருளாதார தலைவர்கள் கூட்டத்தில், (AELM) மலேசிய தூதுக்குழுவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமை தாங்குகிறார்.
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், 21 APEC பொருளாதார தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
“சேர் (Join), வேலை செய் (Work), வளர் (Grow), ஒன்றாகு (Together)” என்ற கருப்பொருளில், APEC பொருளாதாரத் தலைவர்கள் பிராந்தியத்தை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக புத்துயிர் பெறுவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“கோவிட் -19இன் தாக்கங்களை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவதற்கும், தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் பிராந்தியத்திற்கான நிலையான வளர்ச்சியை உருவாக்குவதற்கும் தேவையான முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகளை AELM ஆராயும்” என்று அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MITI) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
– பெர்னாமா