நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 14 இந்தோனேசிய நாட்டவர்கள் கைது

கோத்தா திங்கி, நவம்பர் 25 :

நேற்று தெலுக் புங்கையில் (Teluk Punggai) நடந்த சோதனையில், நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக நம்பப்படும் 14 இந்தோனேசிய நாட்டவர்களை (PATI) கடல்சார் போலீசார் கைது செய்துள்ளனர்.

மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவின் (Maritim Malaysia) ஜோகூர் மாநில இயக்குநர், கடல்சார் அட்மிரல் நூருல் ஹிசாம் ஜகாரியா இது பற்றிக்கூறுகையில், இரண்டு படகுகளில் வெளிநாட்டவர்கள் வந்து கொண்டிருந்ததை மலேசிய கடல்சார் கண்காணிப்பு அமைப்பு (Swasla) ரேடார் மூலம் கண்டறிந்தது என்றார்.

“கிழக்கு ஜோகூர் கடற்பரப்பில் ரேடார் மூலம் அந்த இரு படகுகளும் கண்டறியப்பட்டன. குறித்த வெளி நாட்டினரை ஏற்றிவந்த படகுகள் இந்தோனேசிய கடற்பரப்பில் இருந்து தெலுக் புங்கைக்கு அதிகாலை 1.20 மணிக்கு 30 knots வேகத்தில் வந்தன.

“மலேசிய கடல்சார் சொத்துக்கள் மற்றும் ரோயல் மலேசியன் கடற்படை (RMN) செக்டார் 8 இன் கடல் பகுதியில் Op Benteng நடவடிக்கையின் மூலம் இந்த ஊடுருவல் குறித்து தமக்கு தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதன் விளைவாக ஒன்பது இந்தோனேசிய நாட்டவர்களை அதிகாலை 4 மணிக்கும், மேலும் ஐந்து பேரை காலை 9.30 மணிக்கும் கைது செய்ததாக அவர் கூறினார்.

எட்டு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் அடங்கிய 20 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து வெளிநாட்டவர்களும் மேலதிக நடவடிக்கைக்காக தஞ்சோங் செபாங் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here