சிலாங்கூரில் இந்த ஆண்டு கோவிட்-19 காரணமாக 9,551 இறப்புகள் பதிவு : டாக்டர் சித்தி மரியா தகவல்

ஷா ஆலம், டிசம்பர் 1 :

சிலாங்கூரில் இந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி வரை கோவிட்-19 காரணமாக மொத்தம் 9,551 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் கடந்த ஆண்டு 66 இறப்புகள் பதிவாகிஇருந்தன என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

மாநில பொது சுகாதாரம், ஒற்றுமை, பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுவின் தலைவர் டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறுகையில், இந்த ஆண்டு 7,833 மலேசியர்கள் மற்றும் 1,718 வெளிநாட்டினர் இந்த கொடிய நோய் காரணமாக இறந்துள்ளனர் என்றார்.

சிலாங்கூர் சுகாதாரத் துறையின் (JKNS) பதிவுகள் அடிப்படையில், இந்த ஆண்டு ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை, கோவிட்-19 காரணமாக பதிவாகிய மொத்தம் 8,515 இறப்புகளில் 775 இறப்புகள் அல்லது 9.1 விழுக்காடு மரணங்கள் தடுப்பூசியின் இரு அளவுகளையும் செலுத்திக்கொண்டவர்களை உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 இறப்புகளது எண்ணிக்கையைப் பற்றி, லீ கீ ஹியோங்கை (PH-Kuala Kubu Bharu) பிரதிநிதித்துவப்படுத்திய லாவ் வெங் சானின் (PH-Banting) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மேலும் இந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி வரையுள்ள தரவுகள் அடிப்படையில், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட, மொத்தமாக 1,234 கோவிட்-19 இறப்புக்களில், 759 இறப்புகள் (62%) கோவிட் -19 தொற்றுடன் வேறு கூட்டுநோய் உள்ள இறப்புகளாகவும், 475 இறப்புகள் (38%) வேறு கூட்டுநோய்கள் இல்லாததாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று டாக்டர் சிட்டி மரியா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here