மலேசியக் குடும்பம் 100 நாள் அபிலாஷைகள் தினம் இன்று கோலாகலத் திறப்பு; பொது மக்களுக்கு அரசாங்கம் அழைப்பு

கோலாலம்பூர், டிச. 9-

நாட்டின் வரலாற்றில் இன்று ஒரு புதிய அத்தியாயம் மலர்கிறது. 9ஆவது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் சிந்தனையில் உதித்த மலேசியக் குடும்பம் 100 நாள் அபிலாஷைகள் தினம் இன்று 2021, டிசம்பர் 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.

கோலாலம்பூர் கொன்வென்ஷன் செண்டரில் (கேஎல்சிசி) இன்று டிசம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி இந்நிகழ்ச்சியைத் தொடக்கிவைக்கிறார். டிசம்பர் 12ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியின் உச்சமாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 31 அமைச்சுகள் அவற்றின் 100 நாள் அடைவு நிலைகளை நாட்டுக்கும் மக்களுக்கும் அறிவிக்க உள்ளன.

பிரதமரின் புதிய அரங்சாங்கத்தின் மேலும் அமைச்சர்களின் செயல்பாடுகளை மதிப்பிடும் வகையில் இந்த 100 நாள் உத்தரவு விளங்குகிறது.
ஒவ்வோர் அமைச்சும் அவற்றின் இலாகாக்களும் ஏஜென்சிகளும் நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த 100 நாளில் ஆற்றியிருக்கும் நலச் சேவைகள் மக்களால் மதிப்பிடப்பட உள்ளன.

ஒரே கூரையின் கீழ் 31 அமைச்சுகளும் அவற்றின் அடைவுநிலைகளை மக்களுக்கு அறிவிப்பது என்பது ஒரு புதிய அத்தியாயமாக வரலாற்று ஏட்டில் பதிவாகி இருக்கிறது.

தொடக்க விழாவுக்கு 270 பிரமுகர்களுக்கு அழைப்பு தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் 20,000 பேர் இந்தப் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு நேரில் வருவதோடு 100,000 பேர் மெய்நிகர் (ஆன்லைன்) வழி காண்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நலக் கண்காட்சிகள்

உயர்கல்வி, வேலை வாய்ப்புக் கண்காட்சிகள், சாலைப் போக்குவரத்து சம்மன்களுக்குக் கழிவு, இளையோருக்கு இ-விளையாட்டுப் போட்டிகள், மனங்கவரும் இன்னிசை நிகழ்ச்சிகள் என்று எண்ணிலடங்கா அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

மக்களுக்காகவும் அவர்களின் நல்வாழ்வுக்காகவும் பரிவுமிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த 4 நாள் பிரமாண்ட நிகழ்ச்சி, தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்கேஎன்) வரையறுத்திருக்கும் எஸ்ஓபி விதிமுறைகளுக்கு உட்பட்டு மிகவும் பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது.

கம்பாவுண்ட் சம்மன்களுக்கு 80% கழிவு

கம்பாவுண்ட் சம்மன்களுக்கு 80 விழுக்காடு வரை கழிவு வழங்கப்படுகிறது. எல்லாச் சாலைக் குற்றங்களுக்கும் இது பொருந்தாது. குறிப்பிடத்தக்க குற்றச்செயல்களுக்கு மட்டுமே இச்சிறப்புக் கழிவு வழங்கப்படுகிறது என்று அரச மலேசிய போலீஸ் தெளிவுபடுத்தியிருக்கிறது.

கடுமையான எஸ்ஓபி

மண்டபத்திற்கு வரும் ஒவ்வொருவரும் வரையறுக்கப்பட்டிருக்கும் எஸ்ஓபி விதிமுறைகளை அவசியம் – கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
நுழைவாயிலில் உடல் உஷ்ணத்தைப் பரிசோதிப்பது, மைசெஜாத்ராவில் உள்ள 2 தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டதை உறுதிசெய்யும் டிஜிட்டல் சான்றிதழைக் காட்டுவது, எல்லா நேரத்திலும் முகக்கவசம் அணிவது ஆகியவை கண்டிப்பான உத்தரவாக இருக்கிறது.

பொதுமக்கள் விளக்கம் பெறலாம்

மண்டபத்தில் அமையப் பெற்றிருக்கும் ஒவ்வோர் அமைச்சு, அதன் இலாகாக்கள், ஏஜென்சிகள் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் நேரில் விளக்கம் பெறலாம்.
அஸ்கார் வத்தானியா வேலை வாய்ப்புக் கண்காட்சியும் உண்டு. மலேசிய தற்காப்பு அமைச்சின் ஏற்பாட்டில் ராணுவ வேலை வாய்ப்பு கார்னிவெல், மனிதவள அமைச்சின் ஷோகேஸ் எக்சோ சிஸ்டம் வேலை வாய்ப்பு கார்னிவெல் நிகழ்ச்சி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பட்டறைகள் – உரைகள்

மலேசியக் குடும்ப கோட்பாட்டில் ஆரோக்கியமான ஒரு குடும்பத்தை உருவாக்குவதில் ஒற்றுமை, சமூகப் புரிந்துணர்வு ஆகியவை தொடர்பான பட்டறைகள், சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன. நிஜமும் சவால்களும் என்ற தலைப்பில் அது இடம்பெறுகிறது.
10 கோடி மரம் நடும் இயக்கத்திற்கு உற்சாக மூட்டுவதற்கு பசுமைத் திட்டம் பற்றிய கருத்தரங்கும் உண்டு. மேலும் மலேசியப் புலிகளைப் பாதுகாக்கும் கருத்தரங்கும் நடைபெறும்.

மறவாமல் வாருங்கள்
பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்

நிகழ்ச்சியில் அதிர்ஷ்டக்குலுக்கலும் உண்டு. அதற்குரிய விலையுயர்ந்த – கவர்ச்சிகரமான பரிசுகள் காத்திருக்கின்றன. இந்திய சமுதாய மக்கள் பெருந்திரளாக இந்த நான்கு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here