கோலாலம்பூரில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘AI’ களம் இறங்குகிறது: DBKL இன் அதிரடி திட்டம்!

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் மாநகரப் பகுதிகளில் நீண்டகாலப் பிரச்சினையாக நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணக் கோலாலம்பூர் நகராண்மைக் கசகம் (DBKL) களம் இறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து விளக்குகளைப் புத்திசாலித்தனமாகக் கட்டுப்படுத்தவும், பயண நேரத்தை உடனுக்குடன் (Real-time) துல்லியமாகப் பகுப்பாய்வு செய்யவும் ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்தை DBKL பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பிரதமர் துறை துணை அமைச்சர் லோ சு புய், இந்த புதிய ‘ஏஐ கட்டளை மையம்’ (AI Command Centre) தலைநகரின் போக்குவரத்து ஓட்டத்தை முழுமையாகச் சீரமைப்பதோடு மட்டுமின்றி, பொதுமக்களின் பாதுகாப்பையும் பலமடங்கு மேம்படுத்தும் என்று உறுதியளித்தார்.

சிவப்பு மற்றும் பச்சை விளக்குகளின் நேர அளவுகள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படும் பழைய வழக்கமான முறைக்கு மாற்றாகவே, தற்போதைய வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தானாகவே நேரத்தை மாற்றியமைக்கும் இந்த அதிநவீன ஏஐ (AI) தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

மேலும் பண்டார் பாரு செந்தூக்ல் பகுதியிலுள்ள மவார், மேலூர் அடுக்குமாடி குடியிருப்புகளில் நீண்ட நாட்களாகக் கைவிடப்பட்டுக் கிடக்கும் வாகனங்களை அகற்றுவது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

அத்தோடு செந்தூல் திமூர் எல்.ஆர்.டி (LRT) நிலையத்திற்குச் செல்லும் பொதுமக்கள் மழையிலும் வெயிலிலும் பாதிக்கப்படாமல் இருக்க, பாதசாரிக் கூரை இணைப்புகளை (Pedestrian walkways) அமைப்பது குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார்.

மாநகரின் நெரிசலான பகுதிகளுக்குள் அதிகப்படியான வாகனங்கள் நுழைவதைக் கட்டுப்படுத்த, DBKL பல்வேறு விரிவான கொள்கை மாற்றங்களைப் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இத்திட்டம் முழு வெற்றி பெற மக்களுக்கு நம்பகமான மற்றும் தரமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு மிக அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here