நாளை மார்கழி முதல் நாள் – அம்மாதத்தின் சிறப்புகள் பற்றி அறிவோமா?

மார்கழி மாதம் தனுர் மாதம் ஆகும். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம். இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சினைகளைத் தரக்கூடியது. தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது.
மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே  இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.
மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.
சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள  வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.  விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.  திருப்பாவை என்றாலே நம் நினைவிற்கு வருவது ஆண்டாள் தான். ஆண்டாள் கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். திருப்பாவை ஆண்டாளின் வழிபாட்டை வெளிப்படுத்தும் ஒரு படைப்பாகும்.
மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி  வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு  முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.

சுத்தமான காற்று:

நமது உடலில் பொதுவாக 80% ஆக்சிஜனும், 20% கரியமில வாய்வும் இருக்க வேண்டும். ஆனால் இப்போது இருக்கும் நவீன காலத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து பல நோய்களை ஏற்படுத்துகிறது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஓசோன் படலத்தில் இருந்து வரும் சுத்தமான காற்று வேறு எந்த மாதத்திலும் கிடைக்காது.

அதனால் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் எழுந்து குளித்து, சுத்தமான காற்றை சுவாசிக்கும் பொழுது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் முழுமையாக கிடைத்து ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகி, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

புண்ணியம்:

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தானங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் மார்கழி மாதத்தில் செய்யும் தானங்கள் உங்களுக்கு பெரிய பாக்கியத்தை கொண்டு சேர்க்கும். மார்கழி மாதம் என்றாலே அதிக குளிரை உடையதாக இருக்கும்.

இந்த காலத்தில் வசதி இல்லாத ஏழை எளியவர்கள் உண்பதற்கு உணவு, உடுக்க உடை, இரவு தூங்கும் பொழுது இந்த குளிரை தாங்க முடியாமல் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மார்கழி மாதத்தில் குளிரை போக்க கம்பளி போர்வையை தானமாக வழங்கலாம். இந்த தானம் செய்வதன் மூலம் நிறைய புண்ணியங்கள் உங்களை தேடி வந்தடையும். இதனால் இம்மாதத்தில் உங்களால் முடிந்தவரை யாராவது ஒருவருக்காவது இது போல் கம்பளி தானம் செய்து வாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here