கோலாலம்பூர், டிசம்பர் 16 :
வார இறுதி விடுமுறை வெள்ளிக்கிழமைகளில் வரும் மாநிலங்களுக்கான சம்மன் தள்ளுபடிகள் டிசம்பர் 29 அன்று முடிவடைகிறது, அதே நேரத்தில் வார இறுதி விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வரும் மாநிலங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் 30 அன்று முடிவடைகின்றன.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ மாட் காசிம் கரீம் கூறுகையில், இந்தச் சலுகையின் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், இந்த அதிகபட்ச சம்மன் குறைப்புச் சலுகையின் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு போலீசார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து கட்டணங்கள் செலுத்துமிடங்களும் (கவுன்ட்டர்களும்) அலுவலக நேரத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும்.
“செயல்பாட்டு நேரங்களின் மாற்றம் ஏற்பட்டதன் காரணம் மாநிலங்களுக்கிடையேயான வெவ்வேறு வார இறுதிகள் மற்றும் கணக்காளர் நாயகம் திணைக்களத்தால் 2021 ஆம் ஆண்டில் இறுதி கணக்குகளை மூடுவதற்கான ரசீது மேலாண்மை நடைமுறைகளுக்கு இணங்குவதாலேயாகும் ” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
டிசம்பர் 12ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த போக்குவரத்து சம்மன்களை செலுத்துவதற்கான தள்ளுபடி காலம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக PDRM முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .