கோலாலம்பூர், டிசம்பர் 17 :
இன்று அதிகாலை பெந்தோங்கில் உள்ள கோலாலம்பூர்-காராக் அதிவேக நெடுஞ்சாலையின் 44.1 ஆவது கிலோமீட்டரில் குடும்பத்தினர் பயணித்த கார் சறுக்கி, ஆமை போன்று தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இரண்டு உடன்பிறப்புகள் உயிரிழந்தனர், அவர்களின் பெற்றோர் மற்றும் இளைய சகோதரர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
பகாங் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவுத் தலைவர் கமாருல்ஜமான் ஜூசோ கூறுகையில், அதிகாலை 3.20 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகவும், சிலாங்கூரின் ஷா ஆலமிலிருந்து கிளாந்தானில் உள்ள அவர்களது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த போதே, இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக கூறினார்.
வாஃபா சபியா முகமட் ஹைரி, 17, மற்றும் அவரது சகோதரர் ஆடாம் ஹைகள், 12, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் -தந்தை முகமட் ஹேரி அஹமட்,44, மற்றும் தாய் ஜுரைனி சோல்கிஃப்லி, 44 மற்றும் இளைய சகோதரர், ஃபஹ்மி எய்மான், 10, ஆகியோர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்தனர்.
“கார் ஓட்டுநர் ஒரு மூலைக்கு அருகே மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்றபோது அவர்களின் கார் சறுக்கியதாக நம்பப்படுகிறது.
“விபத்துக்குள்ளான கார் தலைகீழாக கவிழ்ந்ததற்கு வழுக்கும் சாலையின் நிலையும் காரணமாக இருக்கலாம்” என்று கமாருல்ஜமான் கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை மற்றும் பிரேத பரிசோதனைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
























