கோலாலம்பூர், டிசம்பர் 21 :
உலு லங்காட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, இடிந்துவிழும் என்ற அச்சத்தில் உள்ள பத்து 17, ஜாலான் இண்டஸ்ட்ரி உலு லங்காட் மற்றும் ஜாலான் சுங்கை லூய் ஆகிய பகுதிகளிலுள்ள சாலைகளில் லேசாக சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவற்றை போக்குவரத்திற்கு தற்காலிகமாக மூடியுள்ளது என்று மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவரான ஹுலு லங்காட் மாவட்ட அதிகாரி டாக்டர் அனி அஹ்மட் தெரிவித்துள்ளார்.
அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓ) மற்றும் பொதுமக்களை இந்த பாதைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக கனரக வாகனங்கள் செல்வதற்கு இந்தப்பாதைகள் பாதுகாப்பற்றதாக இருப்பதால், சாலை மூடல் அறிவிப்பை பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டது என்றார்.
“நாங்கள் இப்போது குறிப்பிட்ட காரணங்களைக் கொண்ட வாகனங்களை மட்டுமே இந்த சாலையைப் பயன்படுத்த அனுமதிக்கிறோம். வெள்ளம் ஏற்பட்ட இடத்தில் துப்புரவுப் பணிகள், அவசர உணவு உதவி விநியோகம் மற்றும் முக்கியமான வருகைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது,” டாக்டர் அனி கூறினார்.
மேலும் தற்போதைக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளி தரப்புக்களின் நுழைவை கட்டுப்படுத்த காவல்துறையின் உதவியை நாடியுள்ளதாக துறை மாவட்ட பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.
“சேதங்கள் இருந்தபோதிலும், பல குடியிருப்பாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பேரிடர் பகுதிக்குள் நுழைய தங்களை அனுமதிக்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.
“அதிக அளவிலான வாகன இயக்கங்கள் ஆற்றங்கரையை இடிவடையச் செய்யலாம், இதனால் சாலை முற்றாக துண்டிக்கப்படலாம்” என்று அவர் மேலும் கூறினார்.




















