ரந்தாவ் பஞ்சாங், டிசம்பர் 29 :
பொது நடவடிக்கைப் படையின் (PGA7) பட்டாலியன் 7 இன்று அதிகாலை 4.30 மணியளவில், இங்குள்ள சட்டவிரோத லுபோக் காங் தளத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், தாய்லாந்திற்கு கடத்தப்படவிருந்த RM50,405 மதிப்புள்ள 593 மின்புகைத்தலுக்கு பயன்படுத்தும் (வேப் ஃப்ளேவர்) போத்தல்களைக் கைப்பற்றியது.
பட்டாலியன் 7 PGA இன் கட்டளை அதிகாரி, கண்காணிப்பாளர் அஸ்ஹரி நுசி கூறுகையில், சம்பவத்தின் போது, தமது படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொது, சந்தேகத்திற்கிடமான நிலையில் ஆற்றங்கரையில் இருந்து படகிற்கு பெட்டிகளை இறக்கும் ஒரு குழுவைக் கண்டது.
உறுப்பினர்கள்அந்த குழுவை அணுகினர், ஆனால் அவர்கள் கோலோக் ஆற்றைக் கடக்க ஒரு படகைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு தப்பிச் சென்றனர்.
“உறுப்பினர்களால் கைவிடப்பட்ட பெட்டியை ஆய்வு செய்த போது, அதில் பல்வேறு வகையான வேப் சுவைகள் அடங்கிய போத்தல்கள் இருப்பதைக் கண்டறிந்தனர், அவை அனைத்தும் அண்டை நாட்டிற்கு கடத்தப்பட இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
“அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன, மேலதிக நடவடிக்கைக்காக அவை மலேசிய சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன், அறிக்கை நோக்கங்களுக்காக ரந்தாவ் பஞ்சாங் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
“விஷம் சட்டம் 1952 இன் பிரிவு 13 (ஏ) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
படகு மூலம் தாய்லாந்திற்கு கடத்தப்படுவதற்கு முன்பு, சட்டவிரோத தளங்களுக்கு அருகிலுள்ள போக்குவரத்து இடங்களில் வேப் ஃப்ளேவர் போத்தல்களின் இருப்புகளை சேமித்து வைக்கும் முறையை கடத்தல் குழு பயன்படுத்தியதாக அஸ்ஹரி கூறினார்.
மேலும் “தாய்லாந்திற்கு வேப் திரவத்தை கடத்தும் செயல், அந்த நாட்டில் அதிக தேவை இருப்பதுவும், அதன் மதிப்பு மலேசியாவை விட அதிகமாகவும் இருப்பதுதான்,” என்று அவர் கூறினார்.

















