பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 11 :
வார இறுதியில் நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) மீறியதற்காக RM1,000 அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து, ஜன.16 வரை பத்துமலைக் கோவில் நிர்வாகம் காவடிகள் ஆலய வளாகத்திற்குள் நுழைவதைத் தடை செய்துள்ளது என்று தி மலேசியன் இன்சைட் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) கோயில் மைதானத்தில் அதிக பக்தர்கள் கூட்டம் கூடியது , அதில் பக்தர்கள் கோவிட்-19 SOPக்கு இணங்கவில்லை என்று கூறப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது என்றார்.
மேலும் வழிகாட்டுதல்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் இன்று கூடும் என்றும் நடராஜா கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி தைப்பூசம் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.
நேர்த்திக்கடனை செய்த பக்தர்கள் அங்கு எஸ்ஓபி நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் சிலர் முகக்கவசம் அணியவில்லை என்றும் கூறப்படுகின்ற, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





















