சிபுவில் வெள்ளம்!

சிபு, ஜனவரி 12:

நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் தொடர் மழையால், சிபுவின் புறநகரில் உள்ள தாழ்வான பகுதிகளில், இன்று நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.

இன்று பிற்பகல் நிலவரப்படி, இங்குள்ள கம்போங் செடுவானில் உள்ள மூன்று வீடுகள், 0.5 மீட்டர் அளவுக்கு வெள்ளத்தில் மூழ்கின.

மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு மையத்தின் (PGO) செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில், சம்பவம் தொடர்பாக தங்களுக்கு இன்று காலை 11.44 மணிக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.

அவரது கூற்றுப்படி, சுங்கை மேரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) 10 பேர் கொண்ட குழு உதவிக்காக சம்பவ இடத்திற்கு விரைந்தது.

“கிராமத்திற்கு வந்தபோது, ​​​​மூன்று வீடுகள் சுமார் 0.5 மீட்டர் தண்ணீரில் மூழ்கியிருப்பது கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் சாலை கிட்டத்தட்ட ஒரு மீட்டர் வெள்ள நீரில் மூழ்கியிருந்தது .

நேற்று காலை முதல் கனமழை பெய்து வருவதால், வீடுகளுக்குள் தண்ணீர் வேகமாக புகுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

எனினும், வெள்ளத்தில் மூழ்கிய இரண்டு வீடுகளில் வசித்த 14 பேர், வெள்ள நிலைமை உடனடியாக குறைந்து விடும் என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டிலிருந்து வெளியேற மறுத்து விட்டதாக அவர் கூறினார்.

“இன்னொரு குடியிருப்பில் உள்ள ஏழு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உட்பட 10 பேர் மட்டுமே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, “டேவான் கம்போங் ஜெரியாவில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சரவாக்கில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, தற்போது உஷார் நிலையில் உள்ள ஒன்பது பிரிவுகளில் சிபுவும் அடங்கும்.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) இன்று தனது இணையதளம் மூலம் 9 பகுதிகளில் நாளை வரை மோசமான காலநிலை நிலை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில் கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெந்தோங், சரிகேய், முகா (தஞ்சோங் மானிஸ் மற்றும் டாரோ), மற்றும் கபிட் (Kapit dan Song) ஆகியவை வெள்ள அபாயத்தில் உள்ள மற்ற பகுதிகளாகும்.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அமைப்பின்படி, மோசமான வானிலை என்பது தொடர்ச்சியான கனமழையைக் குறிக்கிறது, இப்பகுதிகளில் ஆறு மணி நேரத்திற்குள் 60 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here