ஈப்போ, ஜனவரி 20 :
திடீர் வெள்ளம் ஏற்படும் என நம்பப்படும் பகுதிகளை வெள்ளம் மோசமாக பாதிக்கும் முன், அடைபட்டுள்ள வடிகால் பிரச்சினையைத் தீர்க்க உள்ளூர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் வலியுறுத்தியுள்ளார்
குறிப்பாக மழைக்காலத்தில் வடிகால்கள் அடைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் உள்ளூர் அதிகாரிகளும் மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், வடிகால்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க உள்ளாட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் களத்தில் இறங்க வேண்டும் என்று நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன்.
“அதனால்தான், குறிப்பாக மழைக்காலத்தில் நாம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஈப்போ நகர சபை, வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த சீரமைப்பு நடவடிக்கையை முன்னேடுக்க வேண்டும்.
“அடைக்கப்பட்டிருக்கும் வடிகால்களை கண்டால் மக்கள் மாநகர சபைக்காக (MBI) காத்திருக்க வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றாக பிரச்சினையை தீர்க்க வேண்டும், ”என்று மாநில அரசு ஊழியர்களுக்கான ஓர் நிகழ்வில் அவர் தனது புத்தாண்டு செய்தியில் கூறினார்.
நேற்று மாலை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, நகரின் பல இடங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும், தாமான் பெர்பாடுவான், தாமான் செம்பகா, பண்டார் ஸ்ரீ போதானி, தம்புன், கிரீன்டவுண் மற்றும் அருகிலுள்ள சில பகுதிகளில் அரை மீட்டர் வரை வெள்ளம் வந்ததாகவும் கூறப்படுகிறது.





















